Tamilnadu
சரக்கு லாரி ஏற்றி எஸ்.ஐ படுகொலை.. போதையில் இருந்தவரை கண்டித்ததால் ஆத்திரம்.. தூத்துக்குடியில் கொடூரம்!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பாலு (54). ஏரல் பகுதியில் நேற்று காலையில் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்த முருகவேலை உதவி ஆய்வாளர் பாலு கண்டித்து அவர் பயன்படுத்தும் மினி லாரியை பறிமுதல் செய்து ஏரல் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து ஏரல் காவல் நிலையத்துக்கு மது போதையுடன் வந்த முருகவேல் தனது மினி லாரியை தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரை மாலை காவல் நிலையம் வரச்சொல்லி அனுப்பியுள்ளார் பாலு. இந்நிலையில் நேற்று மாலை காவல் நிலையம் வந்த முருகவேலை உதவி ஆய்வாளர் பாலு சத்தம் போட்டு அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து வாகனத்தை தர மறுத்ததை கண்டித்து உதவி ஆய்வாளர் பாலுவிடம் தகராறில் ஈடுபட்ட முருகவேல் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு ஏரல் பகுதியில் பொது மக்களிடம் அவர் தகராறில் ஈடுபட்டு கொண்டு இருப்பதை அறிந்து அப்பகுதியில் ரோந்து பணிக்கு சென்ற உதவி ஆய்வாளர் பாலு, முருகவேலை கண்டித்து அப்பகுதியில் இருந்து அவரை விரட்டி அனுப்பியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகவேல் தனது நண்பர் ஒருவரின் மினி லாரியை எடுத்துக்கொண்டு ஏரல் காவல் நிலையத்தில் இருந்து வாழவல்லான் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த உதவி ஆய்வாளர் பாலு மீது மோதி படுகொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து முருகவேல் தப்பி சென்றுள்ளார். உதவி ஆய்வாளரை சரக்கு வாகனத்தை ஏற்றி படுகொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவம் குறித்து குற்றவாளியை பிடிப்பதற்கு 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் குற்றவாளி கைது செய்யப்பட்டார் எனவும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயகுமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் போலிஸாருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையிலேயே சட்டம் ஒழுங்கின் நிலை உள்ளது என பொதுமக்கள் அதிமுக அரசை சாடி வருகின்றனர்.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!