Tamilnadu

இட ஒதுக்கீட்டை காரணம் காட்டி M.Tech படிப்புகளை நிறுத்திய அண்ணா பல்கலை. : வேடிக்கை பார்க்கும் அதிமுக அரசு!

தமிழ்நாட்டின் திராவிட இயக்கச் சாதனைகளின் பெருமைமிகு சான்றாக விளங்கி வரும், அறிஞர் அண்ணா பெயரில் நிறுவப்பட்ட அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசு தனது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவர, முயற்சித்து வருகிறது.

இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்யத்துடிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டிக்காமல் அ.தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநரின் தலையீடு, மாநில அரசின் அனுமதி இல்லாமல் துணைவேந்தரின் தன்னிச்சையான முடிவு என கல்விக் கட்டணம் உயர்வு, பாடத்திட்டத்தில் இந்தி திணிப்பு, இட ஒதுக்கீடு பிரச்சனை என தொடர்ந்து பல சிக்கலை அண்ணா பல்கலைக்கழகம் சந்தித்து வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் M.Tech.,பயோடெக்னாலஜி மற்றும் M.Tech., கம்ப்யுடேஷனல் பயாலஜி ஆகிய படிப்புகளில் இந்தாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கையை பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாது, வழக்கமாக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு முறையை தொடராமல், இந்த ஆண்டு GAT-B என்ற மத்திய அரசின் புதிய நுழைவுத்தேர்வு மூலம் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் தேர்வை எழுதி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகி பல நாட்கள் ஆன பிறகும், மாணவர் சேர்க்கையை நடத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளது அண்ணா பல்கலைகழகம்.

இந்நிலையில் சேர்க்கை நடத்தப்பட்டாதது குறித்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இட ஒதுக்கீடு பிரச்சனையால் அண்ணா பல்கலைக்கழகத்தின் இரண்டு பட்டப் படிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், நாடுமுழுவதும் முதுநிலை உயிரி தொழில்நுட்பவியல் படிப்புகள் பல்கலைக்கழங்களில் கற்பிக்கப்படுகின்றன.

அதனடிப்படையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களில், மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பவியல் பாடத்தில், M.Tech.,பயோடெக்னாலஜி மற்றும் M.Tech., கம்ப்யுடேஷனல் பயாலஜி ஆகிய பிரிவுகள் சேர்க்கப்பட்டு கற்ப்பிக்கப்பட்டனர்.

இதற்காக மத்திய அரசு பின்பற்றும் 49.5% இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. இந்நிலையில், நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்கள் சேர்க்கையை தங்கள் நிர்வாகமே மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தது.

ஆனால், தற்போது தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினால் மட்டுமே அதற்கான அனுமதியை அளிக்கமுடியும் என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.

இதன்காரணமாக தமிழக அரசின் 69% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த மனமில்லாத அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம், இந்தாண்டு சில குறிப்பிட்ட பாடப்ப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்து தமிழக மாணவர்களை வஞ்சித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மத்திய அரசின் 50 சதவீத இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதா அல்லது மாநில அரசின் 69 சதவீத இட ஒதுக்கீடு முறையை பின்பற்றுவதா என்பதில் குழப்பம் எழுந்துள்ளதால் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

இதனால், பல மாணவர்களின் கல்விக் கனவு சிதைந்துள்ளதை பற்றி கவலைப்படாமல், அண்ணா பல்கலைக்கழகமும், அதற்கு அழுத்தம் கொடுக்காமல் அ.தி.மு.க அரசும் மெத்தனமாகச் செயல்படுவது இந்த விவகாரங்களில் தெரியவந்துள்ளது.

மேலும், ஆண்டுதோறும் 2 பாடப்பிரிவுகளிலும் மொத்தம் 45 மாணவர்கள் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.12,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது.

இந்தாண்டு இந்தப் படிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டதால் பல மாணவர்களின் கனவுகள் சிதைந்து போனதாக தெரிகிறது. மேலும், இந்த படிப்பை நம்பியிருந்த மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாக பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “2025 வரை இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பே இல்லை” : IMF தலைமைப் பொருளாதார வல்லுநர் கருத்து !