Tamilnadu

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் பேரணி : தி.மு.கவினர் பங்கேற்பு!

இந்தியா முழுவதும் 72வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டுவரும் நிலையில், தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியை நோக்கி இலட்சகணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள விவசாயிகளும், தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தினத்தில் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தும் விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டில் விவசாயிகள் நடத்தும் பேரணி, ஒன்று கூடல்களுக்கும் தி.மு.கழகம் முழு ஆதரவு அளிக்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுக்க நடைபெற்ற விவசாயிகள் ஆதரவு போராட்டங்களில் தி.மு.க விவசாய அணியினர் பங்கேற்றனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக, சென்னையில் வள்ளுவர் கோட்டம் சுதந்திர தின பூங்கா, பல்லவன் இல்லம், கிண்டி பூங்கா உள்ளிட்ட மூன்று இடங்களில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்கா வரை 200க்கும் மேற்பட்டவர்கள் வாகனங்களில் பேரணியாக சென்றனர்.

செங்கல்பட்டு பகுதியில் விவசாயிகள் சங்கத்தினர் இருசக்கர வாகனங்களில் தேசியக் கொடிகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்றனர். திருச்சி கொள்ளிடம் பாலம் பகுதியில் இருந்து டிராக்டர் பேரணியாகச் சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் நடக்கவிருந்த டிராக்டர் பேரணிக்கு போலிஸார் அனுமதி மறுத்த நிலையில், தஞ்சாவூர்- திருச்சி நெடுஞ்சாலையில் 300க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

கோவை, திருப்பூர், மதுரை, விருதுநகர், சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று போராட்டம் நடைபெற்றது.

Also Read: டிராக்டர் பேரணி: தேசியக் கொடியை ஏந்தி டெல்லி எல்லைக்குள் நுழைந்த விவசாயிகள்!