Tamilnadu
கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் திறக்கப்படாத சிங்கம்புணரி உழவர் சந்தை: வேளாண் துறை செயலர் பதிலளிக்க ஆணை!
கட்டி முடித்து 10 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் உள்ள சிங்கம்புணரி உழவர் சந்தையை திறக்கக் கோரிய வழக்கில் வேளாண் துறை செயலாளர், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சியை சேர்ந்த நித்யா, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அதில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உழவர் சந்தை முழுமையாக கட்டப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது. கட்டட பணிகள் முடிந்தும் உழவர் சந்தை இதுநாள் வரை திறக்கப்படாமல் உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தளவு அங்கு விளையும் விளைபொருட்கள் திண்டுக்கல், திருச்சி, போன்ற மாவட்டங்களுக்கு ஏற்றுமதியாகிறது. அதேபோல இங்கு உழவர் சந்தை அமைத்தால் 20 விழுக்காடு விலை குறைவாக, மக்களுக்கு காய்கறிகள் கிடைக்கும். மேலும் உழவர் சந்தை வியாபாரிகளுக்கு அரசே இலவசமாக டிஜிட்டல் தராசுகளை வழங்குகிறது. இதனால் பொதுமக்களுக்கு சரியான எடையில் காய்கறிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும் இப்பகுதி விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நியாயமான விலையில் விற்கவும் வழி உள்ளது. ஆனால் தற்போது வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு வாங்கி வரும் அவலம் உள்ளது. ஆனால், முழுமையாக கட்டட பணிகள் அனைத்தும் முடிந்து 10 ஆண்டுகள் ஆனாலும் இங்குள்ள கட்டடங்களை திறக்காமல் உள்ளனர். இந்த உழவர் சந்தையை திறப்பதற்கு அரசு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு அரசின் வேளாண் துறை செயலாள,ர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு பிப்ரவரி 3ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.
Also Read
-
”நெல் ஈரப்பத அளவை உயர்த்த வேண்டும்!” - ஒன்றிய அமைச்சரிடம் அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தல்!
-
பட்டியலின மக்கள் குறித்த இழிவு பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு!
-
SIR விவகாரம் : பொது விவாதத்தில் நாராச பேச்சு.. அதிமுக நிர்வாகி கோவை சத்யனுக்கு குவியும் கண்டனம் - விவரம்!
-
பசும்பொன்னில் தேவர் திருமகனார் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
”விடுதலைக்குப் போராடிய தீரர்” : முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!