Tamilnadu

“தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்” - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. 13-ம் தேதி திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 11 முதல் ஜனவரி 12 தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் ஆகியவற்றில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோரம், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.