Tamilnadu

“500 கோடி நிதியில் பழங்குடியின மக்களுக்கு எந்த வளர்ச்சி பணியும் செய்யவில்லை” : தி.மு.க MLA குற்றச்சாட்டு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, கூடலூர் ஒன்றிய தி.மு.க சார்பில் ஒன்றிய செயலாளர் லியாக்கத் அலி தலைமையில், கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி முன்னிலையில் நடைபெற்ற அ.தி.மு.கவை நிராகரிப்போம் என்ற கிராம சபை கூட்டம் முதுமலை புலிகள் உள் மண்டல வனப்பகுதியில் உள்ள தெப்பக்காடு குறும்பர் பழங்குடியினர் கிராமத்தில் நடைபெற்றது.

இந்த கிராம சபை கூட்டத்தில் குரும்பர், பெட்ட குறும்பர் பழங்குடியின பெண்கள் ஆண்கள் கலந்து கொண்டு பேசுகையில், பழங்குடியின மக்கள், புலிகள் காப்பகத்தில் வசிக்கும் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வனத்துறையினர் தடை விதித்து வருவதாகவும், கலைஞர் ஆட்சியில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளில் திருமணமாகிய மகன் , மகள்களுடன் ஒரே வீட்டில் மூன்று குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும், இதனால் தங்களுக்கு புதிய வீடுகள் கட்ட அனுமதி வழங்க வேண்டும் என வனத்துறையிடம் பலமுறை வலியுறுத்தியும் வனத்துறையினர் அனுமதி மறுத்து வருவதாக வேதனை தெரிவித்தனர்.

மேலும், படித்த பட்டதாரி பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசு மறுத்து வருவதாக கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி, தமிழக அரசு பழங்குடியினர் மக்களுக்காக 500 கோடி நிதி ஒதுக்கியதாக கூறிய நிலையில், அந்த நிதி மூலம் பழங்குடியின மக்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இதுவரை செய்து தரவில்லை என வேதனை தெரிவித்தார்.

தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் அடிப்படை வசதி, புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவி கீர்த்தனா உட்பட தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Also Read: “சமூகநீதிக்கு மட்டுமல்ல, சட்ட நீதிக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரை!