Tamilnadu
“ஊழல் பற்றி நேருக்கு நேர் விவாதிக்க நான் ரெடி; மிஸ்டர் பழனிச்சாமி நீங்கள் ரெடியா?” : மு.க.ஸ்டாலின் சவால்!
'என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா?' என்று முதலமைச்சர் பழனிச்சாமி நேற்று சவால் - சவடால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே ஊழலுக்காக சிறைக்குப் போன முதலமைச்சரைக் கொண்ட கட்சி - ஊழலுக்காக முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட, என்றும் மாறாத ஊழல் கறை படிந்த கட்சி அதிமுக தான்.
அந்தக் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர் தான்.அது பற்றி எந்தக் கூச்சமும் இல்லாமல், 'நான் ஊழலே செய்யவில்லை' என முழுப் பூசணிக்காயை அவர் இலைச் சோற்றுல் மறைக்க முயற்சிப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு கஜானா பணத்தை அள்ளி விட்டு அதன் மூலம் விளம்பரங்களை வெளியிட்டு இப்படி போலி - பொய்ப் பிரச்சாரம் செய்வதற்கும், அதிகார தோரணையில் போலீஸ் பாதுகாப்புடன் புளுகுப் பிரச்சாரம் செய்தவதற்கும் பழனிச்சாமிக்கு இருப்பது இன்னும் நான்கு மாத அவகாசம் தான். அதனால் தான், என்ன பேசுகிறோம்- எத்தகையை பொய் பேசுகிறோம் என்பது தெரியாமல், கேட்போர் அனைவரும் நம்பி விடுவார்கள் என்ற நப்பாசையில், புலம்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கப் படுகிறேன்.
வாய் திறந்தால் பொய் மட்டுமே பேசத் தெரிந்த - உண்மை என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய- முதலமைச்சரை தமிழகம் இப்போதுதான் முதன் முதலாகப் பார்க்கிறது. கொல்லைப்புற வழியாக குறுக்கு சந்தில் - அதுவும் 'கூவத்தூர் கொண்டாட்ட ஆடல் பாடல்' கூத்து நிகழ்ச்சி மூலம் முதலமைச்சரான பழனிச்சாமிக்கு- ஒரு முதலமைச்சர் பதவிக்குரிய நாகரிகம், கண்ணியம் துளிகூடத் தெரியவில்லை. அதனால்தான் அவருக்கு, குடும்பத்திற்கும்- அரசுக்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை.
மகனின் சம்பந்திக்கும்- பொது ஊழியருக்கும் வேறுபாடு தெரியவில்லை. தனது துறையிலேயே சம்பந்திக்கு 6000 கோடி ரூபாய் டெண்டர் கொடுத்தார். 'என் உறவினர் டெண்டர் எடுப்பதில் என்ன தவறு?' என்று உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். ' ஆன்லைன் டெண்டரில் என் உறவினர் டெண்டர் போட்டால் எனக்கு எப்படித் தெரியும்?' என்று இப்போது அந்தர் பல்டி அடிக்கிறார்.
' நாங்கள் எங்கே ஊழல் செய்தோம்?' என்று கேட்கிறார் பழனிச்சாமி. ஒரு சிலவற்றை மட்டும் பட்டியலிட வேண்டுமென்றால்- மாணவர்களுக்கு மடிக்கணிணி வழங்குவதில் ஊழல், ஆவின் பாலில் ஊழல், ரேஷன் அரசியில் ஊழல், மணலில் ஊழல், ப்ளீச்சிங் பவுடர், துடைப்பம் வாங்குவதில் ஊழல், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறைகளில் மெகா டெண்டர் ஊழல், அமைச்சர்களும்- முதலமைச்சரும் போட்டி போட்டுக் கொண்டு உறவினர்களுக்கு டெண்டர் வழங்கி ஊழல், , மின்சாரம் கொள்முதலில் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல், பாரத்நெட் டெண்டர் ஊழல், உயிர்காக்கும் கொரோனா கருவிகள்- மருந்துகள் வாங்குவதில் ஊழல், காக்னிசெண்ட் டெக்னாலஜி கம்பெனிக்கு பிளானிங் பெர்மிஷன் கொடுப்பதற்கு அமெரிக்க டாலரில் ஊழல்.
மற்று ட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல், எல்.இ.டி ஊழல், கடல்நீரைகுடிநீராக்கும் திட்டங்களில் ஊழல், மின் நிலையம் கட்டுமானப் பணிகளில் ஊழல் என்று முதலமைச்சர் பழனிச்சாமி மீதும்- அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் உள்ள ஊழல் நாற்றம் உலகம் முழுவதும் வீசிக் கொண்டிருக்கிறது. ஏன் இந்தியாவிலேயே ஓட்டுக்குப் பணம் கொடுத்த ஊழலில் மாட்டிக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி பழனிச்சாமி என்ற ஊழலில் ஊறிப்போன முகம்- இந்த நான்காண்டு கால ஆட்சியில் அரசின் கோப்புகளில் எல்லாம் கோரமாகப் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
பத்தாண்டு கால அதிமுக ஆட்சியைக் கிளறினால்- அதில் புறப்படும் ஊழல் பூதங்கள் ஒவ்வொன்றும், மே- 2021க்குப் பிறகு முழுமையாகத் தெரியப் போகிறது. அப்போது முதலமைச்சர் பழனிச்சாமியின் சாயம் வெளுத்து- நீதிமன்றத்தின் வாசலில் அவர் மட்டுமல்ல- அமைச்சர்கள் அனைவரும் நிற்கத்தான் போகிறார்கள்; இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!
திமுகவினர் மீது நில அபகரிப்புப் புகார் என்று ஒரு பொய்யை திரும்பத் திரும்ப பேசி வருகிறார் பழனிச்சாமி. இந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சிதானே இருந்தது? ஏன் சென்ற நான்கு வருடங்களாக முதலமைச்சராக பழனிச்சாமிதானே இருந்தார். எத்தனை தி.மு.க.வினர் மீது நிலஅபகரிப்பு வழக்கில் தண்டனை வாங்கிக் கொடுத்தார்? தி.மு.க.வினர் மீது அதிமுக ஆட்சியில் பொய்ப் புகார் போடப்பட்டது என்று நிரூபிக்கப்பட்டு- அந்த சிறப்பு நீதிமன்றங்களே கலைக்கப்பட்டது என்பதுதான் வரலாறு. அதைக்கூட ஊழல் பணத்தில் 'விவசாய நிலங்களை' பினாமி பெயர்களில் வாங்கிக் குவித்து வரும் பழனிச்சாமியின் அதிகார போதையில் உள்ள கண்களுக்குத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
'என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா?' என்று முதலமைச்சர் பழனிச்சாமி நேற்று சவால் - சவடால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்!
அதற்கு முன்னர் பழனிச்சாமி சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். நாளைக்கே உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து- “ சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்” என்று பழனிசாமி உத்தரவு வாங்க வேண்டும். “எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள்” என்று ஒரு அமைச்சரவை தீர்மானத்தை நாளைக்கே நிறைவேற்றி- மாண்புமிகு தமிழக ஆளுநரிடம் உடனடியாக ஒப்படையுங்கள்.
அதே மாதிரி “வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்” என்று தமிழக ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் இன்றைக்கே எழுதுங்கள். அடுத்த நிமிடமே- விவாதத்திற்கு தேதி குறியுங்கள்; எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும்- உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள்.
முடிந்தால் ஓ. பன்னீர்செல்வம் அவர்களையும் அழைத்து வாருங்கள். ஊழல் பற்றி விவாதிப்போம். அரசு கஜானாவில் பத்தாண்டு கால ஆட்சியில்- குறிப்பாக நான்காண்டு கால உங்களது ஆட்சியில் எப்படி கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள் – என்ன கமிஷன் வாங்கி உள்ளீர்கள்- என்ன கலெக்ஷன் செய்துள்ளீர்கள்- எப்படிப்பட்ட கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்துத் தோரணமாக தொங்க விடுகிறேன். நான் ரெடி- முதலமைச்சர் மிஸ்டர் பழனிச்சாமி அவர்களே நீங்கள் ரெடியா?” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
காசா, லெபனான், ஈரானைத் தொடர்ந்து சிரியா : ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல்... காரணம் என்ன ?
-
திருவள்ளுவர் சொல்லாத குறளை சொன்ன விவகாரம்... ஆளுநர் ரவி செய்தது திட்டமிடப்பட்ட சதி : செல்வப்பெருந்தகை !
-
1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்... ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : சென்னையில் நடந்தது என்ன ?
-
மயிலாடுதுறை மக்களே.. உங்களுக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பத்து தோல்வி பழனிசாமிக்கு வரும் தேர்தல் நிறைவான Goodbye!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!