Tamilnadu

வீணாக மழைநீர் கடலில் கலப்பது தீவிரமான விவகாரம்: நிபுணர் குழு அமைக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் ஆணை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுரேந்திரநாத் கார்த்திக் என்பவர் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில் கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதையும், இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னையில் மீண்டும் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு காரணம் நிலத்தடி நீர் முறையாக சேமிக்கப் படவில்லை என்றும் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்படும் நீர் நேரடியாக கடலுக்கு சென்று வீணாவதாக குறிப்பிட்டுள்ளார்.

மழைநீர் முறையாக பயன்படுத்தாமல் கடலில் வீணாக கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கேட்டு கொண்டுள்ள மனுதாரர்,, நிலத்தடிநீர் மேலாண்மை இல்லாதததால், வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும், அதேபோல மழை நீரோடு கழிவுநீர் கலந்து செல்வதை தடுக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான நீரை சேமித்து வைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி,

நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த பிரச்சனை தீவிரமானது என்றும், நிபுணர்களை கலந்தாலோசித்தால் இந்த விவகாரம் சிறப்பாகக் கையாளப்படும் என்று சுட்டிக்காட்டினர்.

இந்த விவகாரத்தில் நீதிமன்றத்திற்கு நிபுணத்துவம் இல்லாததால், நாங்கள் தீர்மானிக்க முடியாது என்றும் குறிப்பிட்டனர். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கொசிக்சர்மா, இதுகுறித்து ஆராய நிபுணர் குழுவை நியமிக்க நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இந்த விவகாரத்தில் சில அறிவியல் ஆய்வுகளும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நிபுணர் குழு அமைப்பது தொடர்பாக தமிழக அரசு வருகிற 18ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: விடிய விடிய பெய்த மழையால் வெள்ளக்காடான சென்னை.. மழைநீர் வடிகால் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தாது ஏன்?