பெண் காவலர் கிரேசியா
Tamilnadu

“காதல் கணவருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் மோட்டார் பைக்குகள் திருடிய பெண் காவலர்” - பரபரப்புத் தகவல்கள்!

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் காவல் நிலையத்தில், வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவதாக, எஸ்.பி. மணிவண்ணனுக்கு வந்த புகாரின் பேரில், விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

விசாரணையில், காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்ட நாட்களில், இரவு பாரா பணியிலிருந்த இரண்டாம் நிலை பெண் காவலர் கிரேசியா, இரவுப் பணியிலுள்ள காவலர்களை தூங்கவைத்து விட்டு, இருசக்கர வாகனங்களைத் திருடியது வெளிச்சத்திற்கு வந்தது.

காவல் நிலையத்தில் இரவுப் பணி நேரத்தில், தனது காதல் கணவர் பரோட்டா மாஸ்டர் அன்புமணியை காவல் நிலையம் வரவழைத்து, வழக்குகளில் கைப்பற்றப்பட்டு காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை, திருடிக் கொடுத்திருக்கிறார் பெண் காவலர் கிரேசியா.

கிரேசியா கணவர் அன்புமணி

மேலும், காவல் நிலையத்திலிருந்த ஒரு மொபைல் போனையும், விசாரணை சிறைவாசியின் வெள்ளி அரைஞாண் கொடியையும், பெண் காவலர் திருடி கிரேசியா திருடியது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனையடுத்து, பெண் காவலர் கிரேசியா மீதும், அவரது கணவர் அன்புமணி மீதும் திருட்டு வழக்குப் பதிவு செய்து, அவர்கள் திருடிய மூன்று இருசக்கர வாகனங்களையும், ஒரு மொபைல் போனையும், வெள்ளி அரைஞாண் கொடியையும் அவர்களிடமிருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வேலியே பயிரை மேய்ந்தது போன்று, பெண் காவலர் ஒருவரே காவல் நிலையத்தில் திருடியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 'நேற்று தூய்மை பணியாளர் - இன்று பஞ்சாயத்து தலைவி' : கேரள உள்ளாட்சித் தேர்தலில் சாதித்த பெண்!