Tamilnadu
“வேலியே பயிரை மேய்வதா?” - பெண் காவலருக்கு பாலியல் தொல்லை : எடப்பாடி ஆட்சியில் சீர்கெட்டுப்போன தமிழகம்!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் உஷா (31). இவர் சென்னையில் கடந்த ஐந்து வருடங்களாக காவலராக பணிபுரிந்து வருகிறார். தற்போது ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் பணி செய்து வருகிறார். உஷா கணவரைப் பிரிந்து ஆதம்பாக்கத்தில் உள்ள அண்ணன் வீட்டில் தன் மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், உஷா காவல்துறையினரின் வாட்ஸ்-அப் குழுவில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த ஆடியோவில், ஆதம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாலன் (50) என்பவர் தனக்கு அடிபணிய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அதிகப்படியான பணிச்சுமையை கொடுத்து வருவதாகவும், தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், “கொடுக்கும் வேலையை செய்யவில்லை என்றால் வேறு எந்த காவல் நிலையத்திற்காவது பணியிடை மாற்றம் வாங்கிக்கொண்டு சென்று விடு” என்று கூறுவதாகவும், தவறு செய்யாமல் தான் ஏன் டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு செல்ல வேண்டும் எனவும் இதுபோன்ற காரணங்களால்தான் அதிகப்படியான காவல்துறையினர் தற்கொலை செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது, “நானும் தற்கொலை செய்து கொள்கிறேன். அப்படி தற்கொலை செய்து கொண்டால்தான், அனைத்து பெண் போலிஸாருக்கும் விடிவுகாலம் கிடைக்குமோ?” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ வைரலான நிலையில் ஆதம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் பாலனிடம் கேட்டபோது, “நான் பாலியல்ரீதியான தொந்தரவு எதுவும் கொடுக்கவில்லை; பணிகளை மட்டுமே கொடுத்துள்ளேன். அதை பெண் காவலர் உஷா சரியாக செய்யவில்லை” எனத் தெரிவித்தார். இந்த ஆடியோ குறித்து பெண் காவலர் உஷாவிடம் கேட்டபோது, “தான் தற்போது மேற்கொண்டு பேசும் மனநிலையில் இல்லை. நான் பேசிய ஆடியோ உண்மைதான்” என வாய்மொழியாகத் தெரிவித்தார்.
தமிழகத்தில் அ.தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி வரும் நிலையில், தற்போது காவல்நிலையத்தில் பணியாற்றும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் தான் தமிழகத்தில் நிலவி வருவதாக பெண்கள் அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!