Tamilnadu

“விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தின் அவமான சின்னம்” : கார்த்திகேய சிவசேனாபதி

விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி பழனிசாமி கொங்கு மண்டலத்தின் அவமான சின்னம் என தி.மு.க சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில், 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பரப்புரை பயணக் கூட்டம், திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சட்டமன்ற உறுப்பினர் ஜெய ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, அமராவதி பாசன பகுதி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முபாரக் அலி, சாமி, வேலுச்சாமி, ராஜமாணிக்கம், கனகு, செல்லப்பன், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கார்த்திகேய சிவசேனாதிபதி, “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில், திருப்பூர் மாவட்டப் பகுதியில் உள்ள பொதுமக்கள், அமராவதி பாசன விவசாயிகளிடம் சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து வருகிறோம்.

அமராவதி பாசனப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அமராவதி அணையை தூர்வார வேண்டும். பாசன விவசாயிகளுக்கு வாய்க்காலில் மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. இரண்டு போகம் விளைச்சல் கண்டது இன்று ஒரு போகம் மட்டுமே வருவதாக மிகவும் வருத்தம் தெரிவித்தனர்.

விவசாயி மகன் என்று சொல்லிக்கொண்டு, தலையில் பச்சைத்துண்டை கட்டிக்கொண்டு, விவசாயிகளை வஞ்சிக்கும் எடப்பாடி பழனிசாமி, கொங்கு மண்டலத்தின் அவமானச் சின்னம்.

விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் தி.மு.க தலைவரிடத்தில் கொண்டு சேர்த்து, வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வென்று தவி ஏற்றவுடன் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் சரி செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

Also Read: “திமுக தேர்தல் அறிக்கையில் இல்லாததை எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வது கீழ்த்தரமானது” - T.R.பாலு கண்டனம்!