Tamilnadu
மக்களே உஷார்.. வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிப்பு: 92,000 ரூபாய் பறிமுதல் - 3 பேர் கைது!
சென்னை போன்ற பெருநகரங்களில் மோசடி கும்பல்களின் வேலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கொரோனா ஊரடங்கு காலத்தில் அப்பாவி ஏழை மக்களை குறிவைத்து இந்த மோசடிக் கும்பல்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த மோசடி கும்பல்கள் அரசு வேலை அல்லது தனியார் நிறுவனத்தில் அதிக வருமானம் கிடைக்கும் வேலை வாங்கித் தருவதாகவும், வங்கிகளில் கடன் வாங்கித் தருவதாகவும் மக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில், சென்னை தாம்பரம் அருகே வங்கியில் கடன் வாங்கித் தருவதாக பெண்ணிடம் தொலைபேசி மூலம் பேசி பண மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கிழக்கு தாம்பரம் புத்தர் தெருவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (30). இவரது மனைவி மீனாட்சி (25). மீனாட்சியை கடந்த அக்டோபர் 13ஆம் தேதி செல்போனில் தொடர்புகொண்ட மர்மநபர்கள் பிரபல நிறுவனத்தில் இருந்து பேசுவதாகவும், வங்கியில் கடன் வாங்கித் தருவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளனர்.
பின்னர் அக்டோபர் 15ஆம் தேதி வரை மூன்று வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்புகொண்டு மீனாட்சியிடம் இதுகுறித்து பேசியுள்ளனர். இதனை நம்பிய மீனாட்சி தன்னை தொடர்பு கொண்டவர்கள் அளித்த வங்கி கணக்கிற்கு 15ஆம் தேதி முதல் மூன்று தவணைகளாக 15 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி உள்ளார்.
பின்னர் அவர்கள் தொடர்புகொண்ட செல்போன் எண்களுக்கு மீனாட்சி மீண்டும் தொடர்புகொண்டபோது அந்த மூன்று எண்களும் அணைத்து வைக்கபட்டதால், தான் ஏமாந்ததை அறிந்த மீனாட்சி சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலிஸார் சைபர் கிரைம் போலிஸார் உதவியுடன் மோசடியில் ஈடுபட்டு வேளச்சேரி பகுதியில் தலைமறைவாக இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த சரண் ராஜ் (30), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த தௌபிக் (20), மணிகண்டன் (28) ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 92,000 ரூபாய் பணம், செல்போன்கள் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஆன்லைன் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற கும்பலிடம் இருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறை தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் பொதுமக்கள் அலட்சியம் காட்டுவதால் தொடர்ந்து இதுபோல மோசடி சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
Also Read
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
-
ஆப்கானிஸ்தானை புரட்டி போட்ட நிலநடுக்கம் : 600 பேர் பலி - 1500 பேர் படுகாயம்!
-
அரசு கல்லூரியில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் : அமைச்சர் கோவி.செழியன் தகவல்!
-
Insta-வில் வெளியிட்ட வீடியோ.. ரவுடியை திருக்குறள் வாசிக்க வைத்து நூதன தண்டனை கொடுத்த தூத்துக்குடி போலீஸ்!