Tamilnadu

புதிய மருத்துவ கல்லூரிகள் விதிகளின்படியா கட்டப்படுகிறது?- அறிக்கை கேட்டு தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

தமிழகத்தில் மருத்துவக் கல்லூரிகள் இல்லாத திருவள்ளூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் 2021–22 ம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்க தமிழக அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது.

மத்திய அரசின் 60 சதவீத நிதியுதவியுடன் கட்டப்பட உள்ள இந்த மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைக்கக் கோரி, திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் என்னுமிடத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி, மருத்துவக் கல்லூரிகள் 75 ஆயிரத்து 676 சதுர மீட்டர் பரப்பளவுக்கு கட்டப்பட வேண்டும் எனவும், கூட்ட அரங்கு ஆயிரத்து 200 சதுர மீட்டர் பரப்புக்கு கட்டப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதிகளை மீறி திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் 3 ஆயிரத்து 107 சதுர மீட்டர் பரப்புக்கு கூட்ட அரங்கு கட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், கட்டுமானப் பணிகளுக்கு பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்கள், அதிக தொகையைக் குறிப்பிட்டுள்ளதாகவும், ஒரு கல்லூரிக்கு குறிப்பிட்டுள்ள தொகையைக் கொண்டு இரு கல்லூரிகள் கட்ட முடியும் என்றும், இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாமக்கல்லில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரி இடிந்து விழுந்த விபத்தைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மருத்துவக் கல்லூரிகள் தரமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என, அரசுத்தரப்புக்கு அறிவுறுத்தினர்.

மேலும், புதிய மருத்துவக் கல்லூரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிகளின்படி கட்டப்படுகின்றனவா என அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத் துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு பிப்ரவரி மாதம் பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கும், தேசிய மருத்துவ ஆணையத்திற்கும் உத்தரவிட்டனர்.

Also Read: TNPSC பணிகளில் 20% தமிழ் வழி இட ஒதுக்கீட்டு மசோதா ஒப்புதலுக்கு தாமதம் ஏன்? - ஐகோர்ட் கிளை கேள்வி!