Tamilnadu

“சமஸ்கிருத செய்தி ஆணையை உடனே திரும்பப் பெறுக” - தூர்தர்ஷன் சென்னை மண்டல இயக்குநரிடம் த.மு.எ.க.ச மனு!

பொதிகை தொலைக்காட்சியில் நாள்தோறும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு ஒதுக்கவேண்டும் என்ற மத்திய பா.ஜ.க அரசின் உத்தரவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பா.ஜ.க அரசின் சமஸ்கிருத அறிக்கையை திரும்பப் பெறவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் மொழிசார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதிகையில் சமஸ்கிருத அறிக்கைக்கு தடை விதிக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தியறிக்கைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்தது. சமஸ்கிருத செய்தி அறிக்கை, சமஸ்கிருத வாராந்திர செய்தித்தொகுப்பு குறித்த ஆணையை பிரசார் பாரதி நிறுவனம் உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியது த.மு.எ.க.ச.

பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தியறிக்கை வெளியிடுவதற்கு கண்டனத்தைப் பதிவு செய்ததுடன், அதுகுறித்த ஆணையை உடனே திரும்பப் பெறவும் கோரி த.மு.எ.க.ச சார்பில் தூர்தர்ஷன் சென்னை மண்டல இயக்குநரிடம் மனு அளிக்கப்பட்டது.

த.மு.எ.க.ச மாநிலத் துணைச்செயலாளர் அன்பரசன், மத்திய சென்னை மாவட்ட த.மு.எ.க.ச ஒருங்கிணைப்பாளர் ராஜசங்கீதன், தென்சென்னை த.மு.எ.க.ச மாவட்டச் செயலாளர் கண்ணன், வடசென்னை த.மு.எ.க.ச மாவட்டச் செயலாளர் மணிநாத் ஆகியோருடன் மாவட்டக்குழு உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

Also Read: “DD-யில் சமஸ்கிருத செய்தி அறிக்கை ஆணையை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்”: ஐகோர்ட் மதுரைக்கிளையில் முறையீடு!