Tamilnadu

“உ.பி-யில் சாமியார்களுக்குள் போட்டி” : குடிக்கும் தேநீரில் விஷம் வைத்து 2 சாமியார்களைக் கொன்றவர் கைது !

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் கோவர்தன் கிரிராஜ் வத்திகா என்ற ஆசிரமம் ஒன்று உள்ளது. இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த இரண்டு சாதுக்கள் (சாமியார்கள்) கடந்த சனிக்கிழமை உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இதில் உயிரிழந்தவர் குலாப் சிங் மற்றும் ஷியாம் சுந்தர் தாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாது, ராம் பாபு என அடையாளம் காணப்பட்டார். இந்த மூன்று பேரும் கடந்த சனிக்கிழமை வழக்கம் போல தேநீர் குடித்துவிட்டு தங்களது அடுக்கட்ட ஆசிரமப் பணியைச் செய்ய சென்றுள்ளனர்.

அப்போது இருவருக்கும் ஒருசேர கடுமையான வயிற்றுவலி மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுட்டுள்ளது. இதில், சம்பவ இடத்திலேயே இரண்டு பேரும் மயக்கமடைந்துள்ளனர். இதனைப் பார்த்த சக சாமியார்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வரைப் பரிசோதித்த மருத்துவர் குலாப் சிங் முன்னதாகவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர்.

மேலும், ஷியாம் சுந்தர் தாஸ் மருத்துவமனையில் சிகிச்சையின் போதே உயிரிந்தார். இதனிடையே தேநீர் குடித்து பாதிக்கப்பட்ட மற்றொரு சாமியாரான ராம் பாபு மதுராவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே மருத்துவர்களின் முதல்கட்டத் தகவலின் படி, உயிரிழந்த இரண்டு சாமியார்களும் விஷம் கலந்த தேநீரை குடித்து இறந்திருக்க வாய்ப்பு இருப்பதாகவும், பிரேத பரிசோதனைக்குப் பிறகு முழுமையான தகவல் தெரிவிக்கப்பட்டும் என தெரிவித்துள்ளர்.

இதனையடுத்து சம்பவம் அறிந்து வந்த மதுரா எஸ்.பி இதுதொடர்பாக விசாரணை நடத்தினார். மேலும், இதுதொடர்பாக புகார் யாரும் கொடுக்காத நிலையில், போலிஸாரே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராம் பாபு, கோபால் தாஸ், மற்றும் ஷியாம் சுந்தர் தாஸ் ஆகியோர் 25 ஆண்டுகளாக கோவர்தன் ஆசிரமத்தில் வசித்து வருவதாகவும், இதில் கோயில் சொத்துக்கள் தொடர்பாக பல்வேறு துறவிகளுக்கு இடையிலான சண்டைகளுடன் தொடர்புடையதாக இந்த மரணம் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கொலை வழக்கில், பாபா ராம்பாபு என்பவரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சாமியார்களிடையே போட்டிக்காரணமாக விஷம் வைத்து இரண்டு பேர் கொல்லப்பட்ட சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “தி.மு.க-வுக்கு கொள்கையையும், பதவியையும் பற்றிய வகுப்பு எடுக்கவேண்டாம்” : மாலனுக்கு முரசொலி பதிலடி!