Tamilnadu

நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு பசுமை வரியை 3 மடங்கு உயர்த்திய அ.தி.மு.க அரசு: தவிப்பில் வாகன ஓட்டிகள்!

மலைகளின் அரசி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் உலக அளவில் புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாகும். மாவட்டத்தில் உள்ள இயற்கை சூழலை பாதுகாக்க குப்பைகளை சுத்தம் செய்ய மூன்று வருடங்களுக்கு முன்பாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் மாவட்ட நுழைவு வாயிலில் 30 ரூபாய் பசுமை வரி வசூலிக்கப்பட்டு வந்தது.

நாள்தோறும் டீசல் பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில் நீலகிரிக்கு வரும் லாரிகள் மற்றும் பேருந்துகளுக்கு 30 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், 7 சுற்றுலாப் பயணிகள் வரும் வாகனங்களுக்கு 70 ரூபாயும், கார் - ஜீப் போன்ற வாகனங்களுக்கு 30 ரூபாயும், இருசக்கர வாகனங்களுக்கு 10 ரூபாய் என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நீலகிரி சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளிடம் காவல்துறையினர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஊழியர்கள் பலமடங்கு கையூட்டுகளைப் பெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது டீசல் பெட்ரோல் விலை உயர்ந்து வரும் சூழ்நிலையில் எதிர்வரும் 1 ஆம் தேதி முதல் பசுமை வரி மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: நீலகிரி வனப்பகுதியில் பூத்துக் குலுங்கும் ‘செங்காந்தள் மலர்கள்’ : சுற்றுலா பயணிகள் உற்சாகம்!