Tamilnadu

அன்று செம்பரம்பாக்கம்... இன்று செண்பகத்தோப்பு... முன்னறிவிப்பின்றி அணையை திறந்துவிட்ட எடப்பாடி அரசு!

னநிவர் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் தமிழகத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் தமிழக அரசு உபரி நீரை திறந்து விட்டுவருகிறது.

சென்னையின் முக்கிய நீராதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்ததால் நேற்று முதற்கட்டமாக 100 கன அடி திறக்கப்பட்டது. அதற்கு பிறகு 3000, 5000, 7000, 9000 கன அடி என தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் 2015 பெருவெள்ளத்தை போன்ற பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுவிடுமோ என்று சென்னை மக்கள் மிகுந்த அச்சத்துக்கு ஆளாகினர். ஆனால் நீர்வரத்து குறைந்த காரணத்தால் நீர் திறப்பு குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், நிவர் புயல் கரையை கடக்கும் சமயத்தில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் போன்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை மற்றும் நிவர் புயல் காரணமாக ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் வந்ததால் நீர்மட்டம் 57 அடியை எட்டியது. நீர்வரத்து தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதால் அணையை முதன்முறையாக திறந்துவிடுவதாக முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே அணைக்கு வரும் 6 ஆயிரம் கன அடி உபரி நீரை அப்படியே திறந்து விட்டுள்ளார் அ.தி.மு.க அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அணையை திறந்ததால் ராமநாதபுரம், மல்லிகாபுரம், படவேடு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

நீர் திறப்பால் கமண்டல நாக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திடீர் அணை திறப்பால் கடுமையான பாதிப்புக்குள்ளான கிராமத்து மக்கள் 2015ம் ஆண்டு சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரியை எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் அ.தி.மு.க அரசு திறந்துவிட்டது போன்று தற்போது செண்பகத்தோப்பு அணையை திறந்துவிட்டிருக்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Also Read: அறுவடைக்கு தயாரான 2,500 ஏக்கர் நெற்பயிர்கள் நிவர் புயலால் சேதம்: இழப்பீடு கோரும் காஞ்சிபுரம் விவசாயிகள்!