Tamilnadu

‘நிவர்’ எதிரொலி: வெள்ளக்காடானது சென்னை சாலைகள் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் லட்சணம் இதுதானா? (Photos)

நிவர் புயல் எதிரொலியாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அண்ணா சாலை, வேப்பேரி, பெரியமேடு சாலை உள்ளிட்ட சென்னையில் பல பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாகனத்தில் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சி சார்பிலும் காவல் துறை சார்பிலும் சில பகுதிகளில் மழைநீர் அகற்றப்பட்டு வந்தாலும் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் அகற்றப்பட முடியாமல் மாநகராட்சி மற்றும் காவல்துறையினர் திணறி வருகின்றனர்.

இதனால் வாகனங்களில் பயணிக்க கூடிய பொதுமக்கள் பலரின் வாகனங்கள் மழை நீரில் சிக்கி பழுதாகி நின்றுவிடுகிறது. இதனால் இருசக்கர சக்கர வாகனங்களை பொதுமக்கள் தள்ளிச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல் தேங்கியுள்ள மழை நீரால் பழுதாகி நின்ற நான்கு சக்கர, கனரக வாகனத்தின் உதவியுடன் அப்புறப்படுத்துவது பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன.

அதுமட்டுமின்றி புயல் கரையை கடப்பதற்கு முன்பே பெய்திருக்கக்கூடிய மழைக்கே சென்னையில் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கின்ற நிலையில் இன்னும் வருகின்ற நாட்களில் மழை அதிகமாக பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மாநகராட்சியும் காவல்துறையினரும் முழுமையாக செயல்பட்டால் மட்டுமே பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் தவிர்கப்பட்டு பொதுமக்களை பாதுகாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு செய்வதன் மூலம் கொரோனா மட்டுமல்லாமல் பல விதமான பிணியில் இருந்தும் மக்களை பாதுகாத்திட முடியும். ஆகவே போர்க்கால அடிப்படையில் சாலையில் தேங்கும் மழை வெள்ளத்தை வடிகால்கள் மூலம் சீரமைக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன.

Also Read: விடிய விடிய பெய்த மழையால் வெள்ளக்காடான சென்னை.. மழைநீர் வடிகால் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தாது ஏன்?