Tamilnadu
நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு - அசல் விடைத்தாளை சமர்ப்பிக்க தேர்வு முகமைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு!
நீட் தேர்வில் முறைகேடு நடத்துள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் வழக்கு தொடர்ந்த மாணவியின் அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக பதிலளிக்கும்படி தேசிய தேர்வு முகமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மாணவி ஸ்ரேயா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வில் வெற்றிபெற உரிய பயிற்சி எடுத்துக்கொண்டதாகவும், தேசிய தேர்வை முகமை நடத்திய நீட் மாதிரி தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 668 மதிப்பெண்கள் பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 13 ம்தேதி நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்று திருப்திகரமான முறையில் தேர்வு எழுதியதாக குறிப்பிட்ட மாணவி ஸ்ரேயா, தேர்வு முடிந்த பின்பு வெளியிடப்பட்ட சரியான பதில்களை சரிபார்த்ததில் 720 மதிப்பெண்களுக்கு 637 மதிப்பெண்கள் கிடைக்கும் என எதிர்பார்த்ததாகவும், நீட் தேர்வில் 90 கேள்விகளில் ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியான பின்பு 720 மதிப்பெண்களுக்கு 252 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள மாணவி ஸ்ரேயா, தேர்வு முடிவுக்கு பின்பு வெளியிடப்பட்டுள்ள ஓ.எம்.ஆர் விடைத்தாளில் 11 கேள்விகளுக்கு பதில் அளிக்காதது போல் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இணையத்தில் விடைத்தாள்கள் வெளியிட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் எனவே மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் தனது அசல் விடைத்தாளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடவேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் வழக்கு தொடர்ந்துள்ள மாணவியின் அசல் விடைத்தாளை சமர்பிப்பது குறித்து தேசிய தேர்வு முகமை மற்றும் சி.பி.எஸ்.இ வரும் செவ்வாய்கிழமை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
நலம் காக்கும் ஸ்டாலின்: மருத்துவ முகாமில் தொடர்ந்து பயனுரும் வெளி மாநிலத்தவர்கள்- அமைச்சர் மா.சு பதிலடி!
-
நவம்பர் மாதம் முதல்... 4 மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல்.. அமைச்சர் சக்கரபாணி கூறுவது என்ன?
-
உடன்பிறப்பே வா : 2000+ கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர்... கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!
-
திமுக 75 அறிவுத்திருவிழா : ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
"திமுகவை போல் இனி இப்படியொரு இயக்கம் இந்த மண்ணில் தோன்ற முடியாது" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!