Tamilnadu

“பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க அரசு கூறுவது கண்துடைப்பு காரணங்களே” - கனிமொழி எம்.பி சாடல்!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பவும், பணியாற்றிவரும் ஊழியர்களுக்கான பதவி உயர்வு புதிய வேலைவாய்ப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளைக் கைவிடவும், மின் வாரியத்தை தனியார் மயமாக்கும் முயற்சியைக் கைவிட வலியுறுத்தியும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டுக்குழு சார்பில் தூத்துக்குடி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.

300க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்களவை தி.மு.க குழு துணைத் தலைவரும் மகளிரணி செயலாளருமான கனிமொழி எம்.பி இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊழியர்கள் மத்தியில் பேசினார்.

கண்துடைப்பிற்காக காரணங்களை சொல்லி அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்கும் செயலில் மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. தி.மு.க தனியார் மயமாக்கலை தொடர்ந்து எதிர்த்து வருகிறது என்ற அவர், அரசு ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்காமல் செயல்படுவதை ஏற்றுகொள்ள முடியாது. நேரடியாக தனியாருக்கு கொடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்கலை முன்னெடுத்து இருக்கின்றனர்.

இந்தச் செயலைக் கண்டிப்பதாகத் தெரிவித்த கனிமொழி தனியார்மயமாக்கலை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்ற உறுதியினை அளிப்பதாக தெரிவித்தார். இந்த போராட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மின்வாரிய தொ.மு.ச தலைவர் பேச்சிமுத்து செயலாளர் லிங்கராஜ் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க சேர்ந்த நிர்வாகிகள், அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Also Read: “வேல் யாத்திரை நடத்தும் பா.ஜ.க, தமிழைத் தேசிய மொழியாக்க கோரிக்கை வைக்குமா?” : கனிமொழி எம்.பி கேள்வி!