முரசொலி தலையங்கம்

“ரோடு போடச் சொன்னால், நாடு பிடிப்பார்கள் தி.மு.கழகத்தின் தீரர்கள்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

“கொட்டித் தீர்த்த மழையில் இடியாய் இறங்கிய உரை!” என தலைப்பிட்டு தி.மு.கழகத்தின் முப்பெரும் விழாவை பாராட்டிய முரசொலி தலையங்கம்!

“ரோடு போடச் சொன்னால், நாடு பிடிப்பார்கள் தி.மு.கழகத்தின் தீரர்கள்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவைக் காண வானமே, மழையாய் வந்து இறங்கியது. “கொட்டும் மழையில்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், இதே நாளில் வடசென்னைப் பகுதியில் அமைந்திருக்கும் ராபின்சன் பூங்காவில் கழகத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

அவ்வாறு தொடங்கி வைத்த இந்தக் கழகம், 75–ஆம் ஆண்டுகாலம் மட்டுமல்ல, நூற்றாண்டும் நாம் காணப் போகிறோம்” என்று வரலாற்றுக் காட்சியை விவரித்து தனது உரையைத் தொடங்கினார் கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

கொள்கையை உருவாக்கித் தந்த தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள். கொள்கைக்கு அரசியல் வடிவம் கொடுத்தவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள். கொள்கையை ஆட்சியின் மூலமாகச் செயல்படுத்திய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். கடந்த நூறு ஆண்டு கால எழுச்சிக்கும், ஏற்றத்துக்கும் பெரியாரும் அண்ணாவும் திராவிட முன்னேற்றக் கழகமும்தான் காரணம். இதனை உணர்த்தும் விழாவாக முப்பெரும் விழா அமைந்திருந்தது.

“இது முப்பெரும் விழாவா, விரைவில் நாம் சந்திக்க இருக்கும் வெற்றி விழாவா...?” என்று தலைவரால் பாராட்டப்படும் அளவுக்கு கரூரில் திரும்பிய பக்கமெங்கும் மனிதத் தலைகள் என்று சொல்லத் தக்க வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்டக் கழகச் செயலாளர், மேற்கு மண்டலப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி.

“ரோடு போடச் சொன்னால், நாடு பிடிப்பார்கள் தி.மு.கழகத்தின் தீரர்கள்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

ஒரு லட்சம் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது என்றால், ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பொதுக்கூட்டத் திடலைச் சுற்றிலும் இருந்தார்கள். பொதுக்கூட்டத் திடலுக்குள் சாலை போடப்பட்டு, அதனுள் வேனில் வந்தார் தலைவர். ‘கோடு போடச் சொன்னால் ரோடு போட்டுவிட்டார் செந்தில்பாலாஜி’ என்று இதனைக் குறிப்பிட்டார் தலைவர்.

கருமேகங்கள் சூழ, மாலை வேளையில் தொடங்கியது நிகழ்ச்சி. விருதுகள் வழங்கப்பட்டதும், வானில் இருந்து மழை கொட்டியது. அதைத் தொடர்ந்து தலைவர் ஆற்றிய உரை என்பது இடிமுழக்கமாக அமைந்திருந்தது.

•தொண்டர்களாகிய நீங்கள்தான் என்னைக் கழகத் தலைவர் ஆக்கினீர்கள். அதுமுதல் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் கழகம் வெற்றி பெற்று வருகிறது.

•தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக்கினீர்கள். திராவிட மாடல் அரசானது இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்ந்து வருகிறது.

•நமது வெற்றிப் பயணம், தமிழ்நாட்டு மக்களின் ஆதரவுடன் 2026–இலும் நிச்சயம் தொடரும்! திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும்!

•“கழகம் நம்மைக் காத்தது! நாம் கழகத்தைக் காக்க வேண்டும்” என்று உழைக்கும் உங்களைப் போன்ற உடன்பிறப்புகள் இருக்கும்வரை எந்தக் கொம்பனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தோற்கடிக்க முடியாது!

•தமிழ்நாட்டைக் காக்கும் காவல் அரண், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான்!

•தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதுதான் காவிக் கொள்கை!

•தி.மு.க.வுக்கு மாற்று, மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள்... மறைந்துபோனார்கள்... ஆனால், தி.மு.க. மட்டும் மாறவில்லை! தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்து என்றைக்கும் மறையவில்லை! இதுதான் தமிழ்நாடு பாலிட்டிக்ஸ்!

•நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம்!

•ரெய்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.க.–வை அடகு வைத்திருக்கிறார் பழனிசாமி. அன்று எம்.ஜி.ஆர் சொன்னது ‘அண்ணாயிசம்’. இன்று பழனிசாமி செய்வது ‘அடிமையிசம்’. ‘அமித்சாவே சரணம்’.

“ரோடு போடச் சொன்னால், நாடு பிடிப்பார்கள் தி.மு.கழகத்தின் தீரர்கள்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!

•நேற்று டெல்லியில் கார் மாறி மாறிப் போன பழனிசாமியைப் பார்த்து “காலிலேயே விழுந்த பின்னர் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு?” என்று கேட்கிறார்கள்.

•ஒன்றிய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகள் அனைத்தையும் துணிச்சலாக நேருக்கு நேராக எதிர்த்துக்கொண்டு இருக்கிறோம்!

•இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பும் கடமையும் நமக்குத்தான் இருக்கிறது!

•எந்நாளுமே அடக்குமுறைக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! ஆதிக்கத்துக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! திணிப்புக்கு இங்கே நோ எண்ட்ரிதான்! மொத்தத்தில் இங்கே பா.ஜ.க.வுக்கு நோ எண்ட்ரிதான்! ஏன் என்றால், இது பெரியார் – அண்ணா – கலைஞர் – செதுக்கிய தமிழ்நாடு!”

– என்று இடியாய் இறங்கி வெடித்துள்ளார் கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

தலைமுறை தலைமுறையாக நாம் போராடி – எத்தனையோ பேர் உயிரையே தியாகம் செய்து பெற்றுத் தந்த உரிமைகள் அனைத்தும், நம் கண் முன்னே பறிபோக அனுமதிக்கலாமா? அதற்கு பா.ஜ.க.வையும் அதன் கொத்தடிமைக் கூட்டத்தையும் வீழ்த்தியாக வேண்டும் என்பதுதான் தலைவர் இட்ட கட்டளை ஆகும்.

வரப்போகும் தேர்தல் களத்தில் – அதிலும் குறிப்பாக எதிரிகளும், துரோகிகளும், எதிரிகளால் உருவாக்கப்படும் ஏழாம் படைகளும் நூலாம்படைகளும் 2026 ஆண்டு துடைத்தெறியப்படுவார்கள் என்பது உறுதி, உறுதி. அதற்கு உறுதி ஏற்கும் விழாவாக இந்த முப்பெரும் விழாவை நிகழ்த்திக் காட்டி விட்டார் தலைவர்.

நமது விழாக்கள் எதுவும் கூடிக் கலையும் விழாக்கள் அல்ல, கூச்சல் போடும் விழாக்கள் அல்ல. கொள்கையைச் சொல்லும் விழாக்கள். கொள்கையை கூர்தீட்டிக் கொள்ளும் விழாக்கள். கொள்கையை வெற்றி பெற வைக்க வியூகம் வகுக்கும் விழாக்கள்... என்பதை உணர்த்தும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது.

தமிழ்நாட்டைக் காக்கும் அரணாக திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே இருக்கிறது. தமிழ்நாட்டைச் சூழ வரும் ஆபத்தில் இருந்து காக்கும் வல்லமையும், துணிவும், தெளிவும், தியாக உள்ளமும் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனுக்குத்தான் உண்டு. அத்தகைய தொண்டனுக்கு கட்டளையிடும் உரையாக தலைவர் உரை இருந்தது.

கோடு போடச் சொன்னால் ரோடு போடுவார்கள் என்பதைப் போல, ரோடு போடச் சொன்னால் நாடு பிடிப்பார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரர்கள்.

banner

Related Stories

Related Stories