Tamilnadu

ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் நடமாடும் மருத்துவமனை உதவியாளர்களை கண்டுகொள்ளாத அ.தி.மு.க அரசு!

ஆட்சிக்கு வந்தது முதல் அ.தி.மு.க அரசு பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ வழங்கவில்லை என நடமாடும் மருத்துவமனைகளில் பணியாற்றும் உதவியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் சுகாதாரத்துறையின் கீழ் ஒவ்வொரு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திலும் ஒரு நடமாடும் மருத்துவக் குழு செயல்படுகிறது. மருத்துவர், செவிலியர், மருத்துவ உதவியாளர் அடங்கிய இக்குழுவினருக்கு வேன் வழங்கப்பட்டுள்ளது.

நடமாடும் மருத்துவமனை வேன்களில் அவசரகால சிகிச்சை, அடிப்படை ஆய்வக வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நடமாடும் மருத்துவக் குழுவினர், போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் நேரடியாகச் சென்று மருத்துவ முகாம்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும், கொரோனா, டெங்கு காய்ச்சல் போன்ற தொற்று பாதிப்பு மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கடந்த 2009-ம் ஆண்டு தி.மு.க ஆட்சியின்போது நடமாடும் மருத்துமனை வாகனங்களில் பணியாற்ற மாநிலம் முழுவதும் 350 மருத்துவ உதவியாளர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டனர். பணியமர்த்தப்படும் போது ஓரிரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது

அ.தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் முடிவடைய இருக்கும் நிலையில் இதுவரை மருத்துவ உதவியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பணியில் சேர்ந்தபோது வழங்கப்பட்ட ஊதியமே தற்போதும் வழங்கப்படுகிறது.

இதுகுறித்து புகார் தெரிவித்துள்ள நடமாடும் மருத்துவமனை உதவியாளர்கள், “எங்களுக்கு 11 ஆண்டுகளாக ஊதிய உயர்வோ, பணி உயர்வோ வழங்கவில்லை. விடுமுறை நாட்களில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. எங்களை பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளனர்.

Also Read: புதிதாக கட்டப்பட்டுவரும் அரசு மருத்துவக் கல்லூரி கட்டிடம் சரிந்து விபத்து : அ.தி.மு.க ஆட்சியின் அவலம்!