Tamilnadu

“தனது சாவுக்கு டி.எஸ்.பியே காரணம்” : துணை காவல் கண்காணிப்பாளரின் மிரட்டலால் தி.மு.க நிர்வாகி தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் சிவராம பெருமாள். அப்பகுதியில், மருத்துவமனை அமைத்து பணியாற்றி வருகிரார். இவர் தி.மு.க மருத்துவர் அணி மாவட்ட துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவரது மனைவி சீதா அரசு மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஜூலை 12ம் தேதி கொரோனா தொடர்பான பணிக்குச் சென்று திரும்பிய மனைவி டாக்டர் சீதாவை தனது காரில் வீட்டிற்கு அழைத்து வரும்போது, வழியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சிவராம பெருமாளின் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.

காரில் இருந்து இறங்கி சென்ற டாக்டர் சிவராமப் பெருமாள், அரசு மருத்துவமனையில் கோவிட் பணி முடிந்து டாக்டரான தனது மனைவியை அழைத்து வருவதாக ஆங்கிலத்தில் பதில் கூறி உள்ளார். ஆங்கிலத்தில் தான் பேசுவாயா?. தமிழில் பேச மாட்டாயா ? என ஒருமையில் பேசி அவமானப்படுத்தி உள்ளார்.

அப்போது டி.எஸ்.பி. பாஸ்கரன், டாக்டர் சிவராம பெருமாளையும் அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. பொது இடத்தில் பலர் முன்னிலையில் தன்னையும் மனைவியையும் அவமானமாக பேசியதால் சிவராமபெருமாள் துயரத்தோடு வீட்டிற்கு சென்றுள்ளார்.

அன்றிலிருந்து அவ்வப்போது பாஸ்கரன், சிவராமன் பெருமாளை தொடர்ந்து மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனசோர்வுடன் சிவராம பெருமாள் காணப்பட்ட நிலையில், “தன்னை மிரட்டிய துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தான், தனது மரணத்துக்கு காரணம்” என கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவரின் மரணத்திற்கு துணை கண்காணிப்பாளர் காரணமான சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: நீட் உள் ஒதுக்கீடு : அமைச்சர்களின் முடிவுதான் ஆளுநரின் முடிவு - சுட்டிக்காட்டிய தி.மு.க எம்.பி வில்சன்!