Tamilnadu

“அ.தி.மு.க பிரமுகருக்கு உடந்தையாக இருந்த ஆய்வாளரை கைது செய்க” - பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை!

தூத்துக்குடி தட்டார்மடம் வியாபாரி கொலைக்கு உடந்தையாக செயல்பட்ட காவல் ஆய்வாளரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்டோர் மாவட்ட தூத்துக்குடி ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வன். தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த மாதம் அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க பிரமுகர் திருமணவேல் என்பவரால் காரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய‌ இந்தக் கொலை சம்பவத்திற்கு தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்பட ஏழு பேர் உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக திசையன்விளை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அ.தி.மு.க பிரமுகர் உள்பட 7 பேர் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பிசி.ஐ.டி போலிஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. சி.பி.சி.ஐ.டி போலிஸார் நடத்திய விசாரணையில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் திருமண வேல் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தவிர்த்து மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

கொலை சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை நெல்லை சரக டி.ஐ.ஜி பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் செல்வனின் மனைவி ஜீவிதா மற்றும் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்தனர்.

அதில், காவல் ஆய்வாளர் ஹரி கிருஷ்ணனை கைது செய்ய வலியுறுத்தியும், பலியான செல்வனின் மனைவி ஜீவிதாவுக்கு அரசு வேலை வழங்கிடவும், பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தி.மு.க உள்ளிட்ட கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாகவே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் கைது செய்யப்படாமல் இருப்பது பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “என்னை மன்னிச்சிடு மதி..” - ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் உருக்கமான ஆடியோ பதிவு!