Tamilnadu

OBC இடஒதுக்கீடு: மத்திய குழுவிடம் ஏன் வலியுறுத்தவில்லை? ஏன் இந்த அலட்சியப்போக்கு? -தமிழக அரசுக்கு கண்டனம்

ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு நியமித்துள்ள குழுவிடம் தமிழக அரசு வலியுறுத்தாதது ஏன் என கேள்வி எழுப்பி வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி இடங்களில், அகில இந்தியத் தொகுப்புக்கு மாநிலங்கள் வழங்கும் மருத்துவ இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்க வேண்டிய இடஒதுக்கீட்டை மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக மறுத்து வருகின்றது. அதனைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரி தி.மு.க., மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தன.

இந்திய மருத்துவக் கவுன்சில் விதிகளின்படி ஒவ்வொரு மாநிலமும் இளநிலை மற்றும் பட்டயப் படிப்புகளில் 15 விழுக்காடு இடங்களையும், முதுகலைப் படிப்புகளில் 50 விழுக்காடு இடங்களையும் மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மருத்துவக் கல்வி இடங்களை நிரப்பும்போது, அந்தந்த மாநிலங்களில் நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டுக் கொள்கையின்படி அவற்றை நிரப்பலாம் என்று மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகள் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காடு இடங்கள் வழங்கப்படுகின்றன. மாநிலத் தொகுப்புகளிலிருந்து வழங்கப்படும் மருத்துவக் கல்விக்கான இடங்களில் ஓ.பி.சி. பிரிவுக்கு இடஒதுக்கீட்டை வழங்காததால், கடந்த ஆண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளில் 395 இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 425 இடங்களும் இதர பிற்படுத்தப்பட்டோருக்குப் பறிபோயின.

இதுதொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இதுபற்றிய சட்ட வரையறைகளை மூன்று மாதங்களில் உருவாக்கும்படியும், அதற்கான சிறப்புக் குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த இடஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரொஸ்தகி அமர்வில் காணொளி மூலமாக விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசின் சார்பில் நேர்நின்ற மூத்த வழக்கறிஞர்கள் நடப்பு ஆண்டிலேயே 50 சதவிகித இடஒதுக்கீட்டை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என்றனர்.

மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில் தெரிவித்த கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த இடஒதுக்கீடு தொடர்பாக உருவாக்கப்பட்ட குழு, கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஆலோசனை நடத்தியது. அதில், ஓ.பி.சி. மட்டுமின்றி, எஸ்.சி., எஸ்.டி., இடஒதுக்கீடு பற்றியும் பேசப்பட்டது. இதில் தமிழக அரசின் பிரதிநிதியும் கலந்துகொண்டார்.

Also Read: விவசாயிகள் பயிர்க்கடன் பெற கூட்டுறவு சங்கங்கள் அலைக்கழிப்பதா? வைகோ கண்டனம் 

இக்கூட்டத்தில், இடஒதுக்கீட்டை 2021 ஆம் ஆண்டு செயல்படுத்துவது பற்றி பேசப்பட்டதே தவிர, நடப்பு ஆண்டில் நடைமுறைப்படுத்துவது பற்றி எதுவும் பேசவில்லை. தமிழக பிரதிநிதியும் எங்களிடம் இதுபற்றி ஆலோசிக்கவோ அல்லது வலியுறுத்தவோ இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்டோர் புறக்கணிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழக அரசு ஒருபுறம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு, மற்றொருபுறம் இந்த ஆண்டே இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு நியிமித்த குழுவில் வலியுறுத்தாதது ஏன்? கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்த கருத்து உண்மை எனில், தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் அலட்சியப் போக்குடன் செயல்பட்டது கண்டனத்துக்கு உரியது.

தமிழகத்தில் உள்ள 26 அரசு மருத்துவக் கல்லூரிகளில், இளநிலை படிப்புக்கு 3650 இடங்களும், மேற்படிப்புக்கு 1758 இடங்களும் உள்ளன. இவற்றிலிருந்து அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடப்பு ஆண்டே 50 விழுக்காடு இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Also Read: மாநில அரசை மீறி தன்னிச்சையாகச் செயல்படும் சூரப்பாவை வெளியேற்றுக! - வைகோ வலியுறுத்தல்