Tamilnadu
“விவசாய படிப்புகள் தொடங்க NOC பெறுவது கட்டாயம்” - சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு திட்டவட்ட பதில்!
தமிழகத்தில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விவசாய படிப்புகள் துவங்க, தமிழக அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும் என கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அரசின் தடையில்லா சான்று பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது எனவும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து காருண்யா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகிய கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அதில், விவசாய படிப்புகள் துவங்க பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியே போதும் என்றும் தமிழக அரசினுடைய தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர் விவசாயம் என்பது மாநில பட்டியலுக்கு உட்பட்டதென்பதால் விவாசயம் சார்ந்த படிப்புகள் தொடங்க கல்லூரிகளாக இருந்தாலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக இருந்தாலும் 110 ஏக்கர் இடம் வைத்திருக்க வேண்டும் எனவும், அரசின் விதிகள் பின்பற்றினால்தான் தடையில்லா சான்று வழங்க முடியுமெனவும் தெரிவித்தார்.
எனினும், இதுவரை படித்து முடித்த மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாது எனவும் சம்மந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள் விவசாய படிப்புகளுக்கு இனி புதிதாக மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க கூடாது எனவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து, அனைத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும், இந்தாண்டு வேளாண் படிப்புகளில் மேற்கொள்ளப்பட்ட மாணவர் சேர்க்கைகள், இந்த வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
Also Read
-
வடகிழக்கு பருவமழை : நோய் பரவலை தடுக்க தமிழ்நாட்டில் தயார் நிலையில் மருத்துவ முகாம்கள்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்ட முகாம் - 6,37,089 பேர் பயன் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
"புயலால் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - அமைச்சர் KKSSR உறுதி!
-
அதானியை காப்பாற்ற 35 ஆயிரம் கோடி LIC நிதியை வழங்கிய ஒன்றிய பாஜக அரசு... அம்பலப்படுத்திய பிரபல நாளிதழ் !
-
“காஷ்மீர் மக்களை பழிவாங்குவது ஏன்? - அமித்ஷா சொல்வது ‘இரட்டை’ நாக்கு வாக்குமூலம்” : முரசொலி விமர்சனம்!