Tamilnadu

கொரோனா பாதித்தவர் வீட்டில் 250 சவரன் நகை, 1 லட்சம், கார் அபேஸ் செய்த கொள்ளை கும்பல்: சென்னையில் துணிகரம்!

சென்னை தியாகராய நகர் சாரதாம்பாள் தெருவில் வசிப்பவர் நூரின்ஹக்(70). இவர் துபாயில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் நிர்வாக மேலாளராக வேலை பார்த்து ஓய்வுபெற்றவர். இவருக்கு ஆயிஷா என்ற மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகள் வெளிநாட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த வீட்டில் நூரின்ஹக், அவரது மனைவி மற்றும் மனைவியின் அக்கா மகன் முஸ்தபா, பேரன் மொய்தீன் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்துள்ளனர். தற்போது அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலை நூரின் வீட்டிற்கு வந்த மர்ம கும்பல் ஒன்று, அரிவாளை காட்டி ஓட்டுநர் அப்பாஸை மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்து நூரின், அவரது மனைவி, மற்றும் உறவினர் மொய்தீன் ஆகியோரை கட்டிப்போட்டுவிட்டு வீட்டில் இருந்த சுமார் 250 சவரன் தங்க நகை, 1 லட்ச ரூபாய் பணம், 60 ஆயிரம் மதிப்பிலான வாட்ச் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

பின்னர் வீட்டில் வாசலில் நிறுத்தியிருந்த காரை எடுத்துக்கொண்டு உறவினர் முஸ்தபாவை அந்த கும்பல் கடத்திச் சென்று தி.நகரில் உள்ள துணிக்கடை ஒன்றின் வாசலில் இறக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து நூரின்ஹக் மாம்பலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளை நடந்த வீடு

மேலும் வீட்டில் நகை, பணம், கொள்ளையடித்த கும்பல் முஸ்தபாவை மட்டும் கடத்திச் சென்று விடுவித்துள்ளதால் பாண்டி பஜார் போலிஸார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முஸ்தபாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் சூழலில் போலிஸார் விசாரணைக்காக அழைத்து செல்லும்போது எந்த விதமான சோதனைகளையும் மேற்கொள்ளாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருவதால் பிற காவலர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Also Read: ‘கொரோனா பலிகளை மறைக்கும் இந்தியா’ என்ற ட்ரம்புக்கு ‘நமஸ்தே ட்ரம்ப்’ பேரணியை மோடி மீண்டும் நடத்துவாரா?