Tamilnadu

பெரியார் சிலையை அவமரியாதை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் : கே.என்.நேரு குற்றச்சாட்டு!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் இனாம்குளத்தூர் பெரியார் சமத்துவபுரத்தில் நிறுவப்பட்டுள்ள பெரியாரின் மார்பளவு சிலைக்கு நேற்று விஷமிகள் சிலர் செருப்பு மாலை அணிந்து, சாயம் பூசி அவமரியாதை செய்தனர்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் தி.மு.க, தி.மு. கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தி.மு.க முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு சம்பவ இடத்திற்கு சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.என்.நேரு, “தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வர உள்ளதால் தி.மு.க வெற்றி பெற்று விடுமோ? என்ற அச்சத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் சிலையை அவமதிப்பு செய்கிறார்கள்.

பெரியாரை சிறுமைப்படுத்துவதாக எண்ணிக் கொண்டு அவர்கள் சிறுமைப்படுகிறார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. தி.மு.கவிற்கோ அல்லது தோழமைக் கட்சிகளுக்கோ எவ்வித சிறுமையும் இல்லை. எதிர் தரப்பினரின் இதுபோன்ற செயல்களால் நாங்கள் வெற்றி வாய்ப்பைப் பெறுவோம் என்பதை உறுதியாக கூற முடியும்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் முதல்வராக வருவார் இது உறுதி. இன்றைக்கு பெரியார் சிலை அவமதிப்பு செய்பவர்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட முடியுமா?

பெரியார் சிலைக்கு அவமரியாதை செய்பவர்கள் மீது போலிஸார் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். அவ்வாறு நடவடிக்கை எடுத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே பெயரளவிற்கு போலிஸார் வழக்கு பதிவு செய்கிறார்கள்” என குற்றம் சாட்டினார்.

மேலும், டொனால்டு டிரம்ப், நடிகர் வடிவேலு உள்ளிட்ட பலரும் ஆன்லைன் மூலம் தி.மு.க உறுப்பினர் ஆக சேர்க்கப்பட்டுள்ளது குறித்து பேசிய கே.என்.நேரு கிண்டலுக்கு அதுபோன்ற செய்திகளை பரப்பி வருவதாக குறிப்பிட்ட அவர், இளைஞர்கள் தி.மு.கவில் சேர ஆர்வமுடன் உள்ளனர். எனவே இளைஞர்களை உறுப்பினராக சேர்க்கும் வகையில் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாஜக அரசு, மிஸ்டுகால் மூலம் உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகிறதே? அது சரியான செயலா? என எதிர் கேள்வி எழுப்பினார்.

Also Read: திருச்சியில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!