Tamilnadu

புதுச்சேரியில் பெரியார் உருவத்தை மணற்சிற்பமாக உருவாக்கிய கலைஞர் : நீட் தேர்வுக்கு எதிராக வாசகங்கள்!

பெரியாரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி அவரது உருவத்தை மணல் சிற்பமாக புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் மணல் சிற்ப கலைஞரான குபேந்திரன் வடிவமைத்துள்ளார்.

அறிவாசான் தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதையொட்டி புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஏற்பாட்டின் பேரில் இந்த மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிற்பத்தை பொது மக்கள் கண்டுகளித்தனர்.

ஓவியரும் சிற்பியுமான குபேந்திரன் புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூடத்தில் சிற்பக்கலையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பெரியாரின் உருவத்தை மிகப்பெரிய மணற்சிற்பமாக வடிவமைத்துள்ள இவர் பல விருதுகளை வென்றுள்ளார்.

வீராம்பட்டின கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிற்பம் 5 டன் மணலால் உருவாக்கப்பட்டுள்ளது. 48 மணி நேரம் உழைத்து இந்தச் சிற்பத்தை அவர் உருவாக்கியுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து நீட் தேர்வின் கொடூரத்தால் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதை உணர்த்தும் விதத்திலும், நீட் கொடுமையை மக்களுக்குப் பறைசாற்றும் விதத்திலும் நீட்டை தடை செய், நீட் வேண்டாம் போன்ற வாசகங்கள் இந்த சிற்பத்தின் கீழ் இடம்பெற்றிருந்தது. மேலும் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளான ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகமும் இந்த சிற்பத்தின் கீழ் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்துத்வ சக்திகள் தமிழ்நாட்டுக்குள் நுழைய எத்தனிக்கும் இச்சமயத்தில், தமிழ் மொழிக்கும் கலாச்சாரத்துக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்த நினைக்கும் இக்காலத்தில் பெரியார் மணற்சிற்பத்தை குபேந்திரன் வடிவமைத்து தமிழ் மண்ணின் உண்மை முகத்தை உலகுக்குக் காட்டியதை அனைவரும் பாராட்டினர்.

Also Read: ‘ஒரு கோடி கைகளில் பெரியார்’ - பெரியார் சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்