Tamilnadu
“ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளையும் சீரழிக்கின்றன” - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கக் கோரியும், அதன் விளம்பரங்களில் நடிக்கும் கிரிகெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யக்கோரியும் வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யக்கோரி வழக்கறிஞர் வினோத் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகளில் இன்று மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தகவல் தொழில்நுட்ப சட்ட விதிகளின்படி, தனி அதிகாரி நியமிக்கப்பட்டு உள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவில்லாமல் எந்த இணையதளத்தையும் தன்னிச்சையாக முடக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதள சேவை நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் மட்டுமே வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளால் இளைஞர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாகத் தெரிவித்தனர். மேலும், பெற்றோர் உறங்கச் சென்ற பிறகு ஆன்லைனில் விளையாடத் தொடங்கும் பிள்ளைகள், அதிகாலை வரை விளையாடுவதாகவும், இந்த விளையாட்டுகளுக்கு குழந்தைகளும் அடிமையாவதாகவும் குறிப்பிட்டனர்.
மனுதாரர் சூரியபிரகாசம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்த வழக்கில் விராட் கோலி, தமன்னாவை எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இருவரையும் வழக்கில் சேர்க்க மறுத்த நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களை மட்டும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர்.
மேலும், வழக்குக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை செப்டம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
"மோடி நாட்டின் பிரதமர் என்பதை மறந்து பழைய குஜராத் கலவரக் காலத்திலேயே இருக்கிறார்" - முரசொலி விமர்சனம் !
-
சென்னை ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜானிஸ் ஜென்... கோப்பை வழங்கி முதலமைச்சர் பாராட்டு !
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!