Tamilnadu

தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் உள்ள சிறப்பான பெயருக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது: நீதிபதிகள் கருத்து

சிவகங்கை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்தவர் செந்தில். இவர் சொத்து தகராறில் 2010-ம் ஆண்டு படு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலமுருகன் என்பவருக்கு சிவகங்கை நீதிமன்றம் 2014-ல் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியது. இதை ரத்து செய்யக்கோரி பாலமுருகன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

அதனை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “இந்த வழக்கைப் பொறுத்தவரை ஒரு குற்ற வழக்கில் விசாரணை எப்படி நடைபெற வேண்டும் என்ற அடிப்படையே தெரியாமல், மெத்தனமாகவும், தன் விருப்பத்துக்கு ஏற்பவும் விசாரணை அதிகாரி செயல்பட்டுள்ளார்.

இதனால், மனுதாரர் விடுதலை செய்யப்படுகிறார். எந்த விசாரணையாக இருந்தாலும் ஒருதலைசார்புடன் நடைபெறக்கூடாது. விசாரணை நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமலும் நடைபெற வேண்டும். நியாயமான விசாரணை அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமையாகும். உண்மையை வெளிக்கொண்டு வருவதே விசாரணையின் நோக்கமாகும்.

தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான பெயர் உள்ளது. இந்த பெயருக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தில் குற்றவியல் வழக்கு விசாரணையின் தரம் குறைந்து வருகிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது.

இதே போல் விசாரணை தொடர்ந்தால் பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். இதனால் இந்த வழக்கில் உள்துறை செயலர், டி.ஜி.பி, இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் முத்துக்குமார், பவுன் ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

விசாரணை அதிகாரிகள் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் போதிய நிபுணத்துவம் பெற்றுள்ளார்களா? விசாரணையின் தரத்தை மேம்படுத்தவும், தற்போதுள்ள அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்தவும் என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்பதற்கு உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Also Read: மக்கள் பிரதிநிதியை ஆலோசனை கூட்டத்திற்கு அனுமதிக்காத காவல்துறை - கேள்வி கேட்ட தர்மபுரி எம்.பி! (வீடியோ)