Tamilnadu

“ஆன்லைன் வகுப்புக்கு தடையில்லை; ஆனால் நெறிமுறைகள் பின்பற்றாவிடில் நடவடிக்கை பாயும்” - ஐகோர்ட் எச்சரிக்கை

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் மூலம் வகுப்புகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர் முயற்சிக்கும் போது ஆபாச இணைய தளங்களால் அவர்களின் கவனம் சிதைவதாகவும், ஆன்லைன் வகுப்புகளை மொபைல் மூலமும், லேப்டாப் மூலமும் பார்ப்பதால் மாணவர்களின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாலும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குப்படுத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது. அதனை தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் , தமிழக அரசின் ஆன்லைன் விதிகளின்படி, மழலையர் வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது எனவும்,ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளை கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் வீதம் 2 வகுப்புகளும், 9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 45 நிமிடங்களுக்கு மிகாமல் 4 வகுப்புக்கள் நடத்தலாம் எனவும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடத்த வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

அதே போல, ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மத்திய அரசு தரப்பில், டிஜிட்டல் வழி கல்வியை நோக்கி பயணிக்க வேண்டிய காலம் வந்து விட்டதாகவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மாணவர்களுக்கு எந்த ஒரு சுமையும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு,ஆன்லைன் வகுப்புகள் நடத்த தடையில்லை எனக்கூறி மனுதார்கள் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் உருவாக்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஆன்லைன் வகுப்பு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும்.

மாவட்ட தலைமையகத்தில் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட 14 வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். ஆன்லைன் வகுப்பின் போது ஆபாச இணையதளங்களை பார்க்க நேரிட்டால் பெற்றோர்கள் காவல்துறையில் புகார் கொடுக்கவும், பள்ளிகள் வழிகாட்டு நெறிமுறைகளை மீறினால் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.