Tamilnadu

நீட் தேர்வால் தமிழகத்தில் மேலும் ஒரு மாணவன் பலி : பா.ஜ.க., அ.தி.மு.க அரசின் துரோகத்தால் தொடரும் உயிர்பலி!

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள்.

மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா, சென்னை சேலையூர் ஏஞ்சலின், திருவள்ளூர் ஸ்ருதி, திருப்பூர் ரிதுஸ்ரீ, தஞ்சாவூர் வைஷியா, நெல்லை தனலட்சுமி மற்றும் கோவை சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது, அரியலூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த விக்னேஷ் என்ற மாணவன்மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் - தமிழ்ச்செல்வி இவர்களுக்கு விக்னேஷ் வயது 19. வினோத் வயது 16 என்று 2 மகன்கள் உள்ளனர். விஸ்வநாதன் பெட்டி கடை வைத்து உள்ளார். விக்னேஷ் சிறுவயது முதலே டாக்டர் ஆகவேண்டும் என்ற கனவில் கடினமாக படித்து வந்துள்ளார்.

செந்துறை தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2017 ஆம் ஆண்டு +2 பொதுத் தேர்வில் 1006 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். அதன் பின்னர் கேரளாவில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையம் மற்றும் துறையூர் சௌடாம்பிகாவிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதி ஒருமுறை தோல்வியும் ஒருமுறை தேர்ச்சி பெற்ற நிலையிலும் டாக்டர் சீட் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 3 வது முறையாக நீட் தேர்வு எழுத தீவிரமாக படித்து வந்துள்ளார். வருகின்ற 13 தேதி ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் இந்த தேர்விலாவது அதிக மதிப்பெண் பெற்று டாக்டர் ஆக முடியுமா? என்று கடந்த 2 நாட்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டைவிட்டு வெளியே சென்ற விக்னேஷ் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்த போது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து கிணற்றில் இருந்து சடலமாக விக்னேஷ் உடலை உறவினர்கள் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

நீட் தேர்வு காரணமாக மாணவன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காட்டு தீ போல பரவியது. இதனையடுத்து அரியலூர்- ஜெயங்கொண்டம் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் அக்கிராம மக்கள் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கிராமப்புற மாணவர்களின் உயிரைக் குடிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோஷமிட்டனர். உடலை எடுக்க வந்த ஆம்புலன்ஸையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Also Read: “அனிதா முதல் சுபஸ்ரீ வரை நீட் பலி கொண்ட 8 உயிர்கள்” : அனிதாக்களை மறவோம்..! #ScrapNeet