Tamilnadu

அடுத்த 48 மணிநேரத்திற்கு 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்!

தென் தமிழகத்தில் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம், நீலகிரி, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்களில் இலேசான மழையும் ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டி பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கயத்தாறு (தூத்துக்குடி) 7 செமீ, வானமாதேவி (கடலூர்) 5செமீ, சோழவந்தான் (மதுரை), வாடிப்பட்டி (மதுரை), ஆண்டிபட்டி (மதுரை), திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு), பஞ்சப்பட்டி (கரூர்), தாத்தையங்கார்பேட்டை (திருச்சி) தலா 4 செமீ, வந்தவாசி (திருவண்ணாமலை), கமுதி (ராமநாதபுரம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), குறிஞ்சிப்பாடி (கடலூர்) தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது .

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

ஆகஸ்ட் 26 வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்ட் 26, 27 மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும், என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு :

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 27.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.