Tamilnadu
“பாதுகாக்கப்பட்ட வேணாண் மண்டலம் வெறும் அறிவிப்பு மட்டும்தானா?” - கொந்தளிக்கும் டெல்டா விவசாயிகள்!
தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து அதற்கான எந்த ஒரு கொள்கை திட்டங்களையும் உருவாக்கவில்லை என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்குவதாக தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழக காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
“தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கால்நடை பண்ணைகளில் ஒன்று கொருக்கை உம்பளச்சேரி காளைகளை உருவாக்கும் கொருக்கை கால்நடை பண்ணை. கஜா புயலால் இங்கு இருந்த அத்தனை கட்டிடங்களும், மாட்டு தொழுவங்களும் சீரழிந்துவிட்டது. இதுவரையிலும் இதனை சீரமைக்க இரண்டு ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ள நிலையில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் மழையில் நனையக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாடுகள் வளர்ப்பதற்கு தேவை என்று 900 விவசாயிகள் இந்த அலுவலகத்தில் பதிவுசெய்திருக்கின்றனர். அவர்களுக்கு உரிய தகுதியான மாடுகளை வழங்காமல், இங்கு இருக்கும் மாடுகளில் 67 தரமான கால்நடைகளை, தரமற்ற மாடுகள் என்று அவர்களாகவே பட்டியலிட்டு மாநில உயர் அதிகாரிகளிடம் தவறான தகவலைச் சொல்லி அனுமதி பெற்று இந்த பகுதியை சார்ந்த விவசாயிகளுக்கு தெரியாமல் எந்தவொரு விளம்பரமும் செய்யாமல் இரவோடு இரவாக டெண்டர் விடப்பட்டு தவறான வகையில் வணிகர்களிடம் விற்கப்பட்டிருக்கிறது.
இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசு ஒரு உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இதில் அரசியல் சாயம் பூசுவதற்கு மருத்துவர்களே முடிவு செய்கிறார்கள். அதற்கு அனுமதிக்காமல் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தவும் விவசாயிகளுக்கு தேவையான கால்நடைகளை விரைந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை மறுக்கும்பட்சத்தில் வரும் 10ம் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகளுடன் கொருக்கை கால்நடை பண்ணையை எனது தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்.” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “நேற்றையதினம் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி வெளிவந்திருக்கிறது. காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. விவசாய சங்கங்களும் பாராட்டு தெரிவித்தன. நேற்று உயர்நீதிமன்றத்தில் மணல் சூறையாடுவது குறித்த வழக்கில் இதுவரையிலும் தமிழக அரசு காவிரி பாசனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்து அதற்கான எந்தவொரு வழிமுறைகளையும் கொள்கை திட்டங்களையும் உருவாக்கவில்லை அரசாணை வெளியிடப்படவில்லை என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார். இது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்குகிறது.
எனவே தமிழக முதல்வர் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது குறித்தும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்த தகவல் குறித்தும் உண்மைநிலையை தெளிவுபடுத்த வேண்டும். அரசாணை வெளியிடப்பட்டு இருக்குமேயானால் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்குமேயானால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக விவசாயிகளுக்கு அந்த அரசாணை குறித்து தெளிபடுத்த வேண்டும். தமிழக முதல்வரும் விளக்கம் அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!