Tamilnadu

தமிழகத்தில் 4,000-ஐ நெருங்கும் கொரோனா உயிர்பலி : இன்று மேலும் 5,881 பேருக்கு தொற்று! #CoronaUpdates

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி 7 ஆயிரத்தை நெருங்கி வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்றும் இன்றும் 6 ஆயிரத்துக்குள் பதிவாகி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று முதல் சோதனை எண்ணிக்கை 58 ஆயிரமாக குறைந்துள்ளது.

அவ்வகையில், புதிதாக 58 ஆயிரத்து 350 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா சோதனையில் 5 ஆயிரத்து 881 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 31 பேர் நீங்கலாக தமிழகத்திலேயே இருந்த 5,850 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டாவது நாளாக கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90க்கு மேல் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 97 பேர் கொரோனாவால் பலியாகியிருக்கிறார்கள். அதில் அதிகபட்சமாக சென்னையில் 21, திருவள்ளூரில் 10, கன்னியாகுமரி, விருதுநகரில் தலா 6, திருப்பத்தூர், தேனி, திருவண்ணாமலையில் தலா 5, கோவை, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, வேலூரில் தலா 4 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இதனையடுத்து மொத்தமாக மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, இன்று ஒரே நாளில் 5,778 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 956 பேர் தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆகவே தற்போது 57 ஆயிரத்து 968 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் தமிழகத்தில் 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மொத்தமாக, 25 லட்சத்து 60 ஆயிரத்து 269 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Also Read: இதுவரை இல்லாத அளவுக்கு உயிரிழப்பு : தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 97 பேர் பலி! #Covid19