Tamilnadu
உயர்கல்வி படித்த 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கல்வித்துறை கருணையற்றத் துறையாகிறது - திமுக MLA சாடல்!
தொடக்கக் கல்வித்துறையில் உள்ள ஆசிரியர்கள் அனுமதி பெறாமல் உயர் கல்வி படித்த காரணத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் கொடுக்கப்பட வேண்டும் என்ற காரணத்தாலேயே இந்த நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
இதற்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஃபேஸ்புக்கில் அவர் குறிப்பிட்டுள்ள பதிவின் விவரம்:-
அதில், “மரமேறி விழுந்தவனைக் கடா ஏறி மிதிச்சதாம்!”
“ எங்களிடம் கேட்காமல் உயர்கல்வி படித்துவிட்டார்கள்”, என்று ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது தொடக்கக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாக வந்துள்ள செய்திகளைப் பார்க்கும் போது, எனக்கு மேலே இருக்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகின்றது.
ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீதுக் கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது நகை முரணாகத் தோன்றினாலும், அனுமதி பெறவில்லையெனச் சில விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது கண்டிக்கத்தக்கதாகும்.
ஏற்கனவே இந்த அரசால், ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில் பழிவாங்கப்பட்டு, பலர் மீது குற்ற வழக்குகள் புனையப்பட்டு, மிகுந்த துயரத்துக்கு ஆளாகி இருக்கின்றது. அவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என எவ்வளவோ வலியுறுத்தியும் ஏற்றுக்கொள்ளாமல் இன்றுவரை தமிழக அரசு பாராமுகமாகப் பிடிவாதப் போக்குடன் நடந்து கொள்கிறது.
இப்போது “ கொரொனா” நோய்த்தொற்றால் கடந்த நான்கு மாதங்களாக நாடே அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், ஏதோ ஒரு சப்பைக் காரணத்தைக் காட்டி ஐயாயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும் ஏற்க முடியாத செயலும் கூட!
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடனே தலையிட்டு, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஏற்கனவே அவதிக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கிடும் தொடக்கக் கல்வித்துறையின் இந்த ஆணையைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
கல்வித்துறை, ஒருபோதும் கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது!
“வெருவந்த செய்தொழுகும் வெங்கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்”
நினைவிற் கொள்க!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“சிவந்தது சென்னை!” - மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த அபராதம் செல்லும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
-
“கலைஞர் ஒரு வரலாற்றுப் பதிவு! அவரை யாராலும் முறியடிக்க முடியாது!” : தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் தமிழ்நாட்டு MP-க்கள் : முதலிடத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் MP!
-
அண்ணா பல்கலைக்கழக உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ.500 கோடி நிதி! : அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு!