Tamilnadu
“வக்பு வாரியத்தை கலைத்து தனி அதிகாரியை நியமித்தது சட்டவிரோதம்?” - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை!
தமிழ்நாடு வக்பு வாரியத்தில் 11 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை ஒட்டி, கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தல் மூலம் 6 பேரும், நியமனம் மூலம் 4 பேரும் உறுப்பினர்களானார்கள். மேலும், பார் கவுன்சில் உறுப்பினர்கள் இல்லாததால், இரு மூத்த வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
நியமன உறுப்பினர்களை விட தேர்வான உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்ற விதிப்படி இல்லாததால், வாரியத்தை கலைத்து 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், நிதித்துறை செலவின செயலராக சித்திக் என்பவரை வாரியத்தின் சிறப்பு அதிகாரியாகவும் நியமித்தது.
முத்தவல்லிகள் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்காக ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ள முத்தவல்லிகளின் பட்டியலை அனுப்பும்படி மண்டல கண்காணிப்பாளர்களுக்கும், செயல் அதிகாரிகளுக்கும் தலைமை செயல் அதிகாரி உத்தரவிட்டிருந்தார். தமிழக சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் வக்பு வாரியம் கலைக்கப்பட்ட அரசாணையையும், முத்தவல்லிகள் பட்டியலை கேட்கும் கடித போக்குவரத்துகளையும் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை இராயப்பேட்டையை சேர்ந்த எஸ்.சையது அலி அக்பர் என்ற வக்பு வாரிய உறுப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் மனுவில், பார் கவுன்சில் உறுப்பினர்களில் இஸ்லாமியர் இல்லாதபோது வக்பு வாரியத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகத்தான் கருதப்படுவார்கள் (Section 14 (1) (b) (iii)) என விதிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இரு வழக்கறிஞர்களை நியமித்தது தொடர்பான பிரச்னையில் அவர்கள் ராஜினாமா செய்துவிட்டதால் நியமன மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கைகள் விதிகளுக்கு உட்பட்டு வந்துவிட்ட நிலையில் வாரியத்தை கலைத்தது சட்டவிரோதம் என குறிப்பிடப்பட்டுள்ளது. உறுப்பினர் இடங்கள் காலியாக இருந்தால் அவற்றை நிரப்புவதற்கு (Section 21) தமிழக அரசுக்கும் அதிகாரம் இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் கூடுவது மத்திய அரசால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசால் தேர்தலை நடத்த முடியாது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனையின்படி முடிவெடுத்ததாக கூறும் அரசு அவற்றை உறுப்பினர்களுக்கு வழங்காமல் வாரியத்தை கலைத்தது என்பது இயற்கை நியதியை மீறிய செயல் என்றும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அரசின் மூன்று உத்தரவுகளையும் ரத்து செய்துவிட்டு வக்பு வாரியத்திடமே அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டுமென பிரதான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக சிறுபான்மையினர் நலத்துறை, வக்பு வாரிய தனி அதிகாரி, வக்பு வாரிய தலைமை செயல் அதிகாரி ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?