Tamilnadu

“உதவி செய்வதாக அழைத்துச் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை” - இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது!

சென்னை அயனாவரம் பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பாட்டியுடன் சண்டையிட்ட சிறுமி ஏப்ரல் 20-ம் தேதியன்று கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி பெரம்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது திருத்தணியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் சிறுமிக்கு ஆறுதல் கூறியுள்ளார். மேலும் தன்னுடன் வந்தால் தான் பாதுகாப்பாக பார்த்துக்கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

வெங்கசேடனின் பேச்சை நம்பிய சிறுமி அவருடனே திருத்தணிக்குச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்றதும் வெங்கடேசன் சிறுமியிடம் தவறாக நடந்துக்கொண்டுள்ளார். மேலும் வெளியில் யாரிடமாவது சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டி தனி அறையில் சிறுமியை அடைத்து வைத்து வெங்கடேசன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

வெங்கடேசனின் தாயார் இதனைக் கண்டித்தும் சுமார் மூன்று மாதங்களாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு உதவ முடிவு எடுத்த வெங்கடேசனின் தாயார் வெங்கடேசன் வெளி ஊருக்குச் சென்ற நிலையில் நேரம் பார்த்து சிறுமியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இதனையடுத்து அங்கிருந்து தப்பித்து வந்த கடந்த ஜூலை 09ம் தேதி சிறுமி திருத்தணி ரயில் நிலையத்தில் அழுகையுடன் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது சிறுமியை பார்த்த ரயில்வே போலிஸார் அவரை மீட்டு விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி தனக்கு நடந்த கொடூரத்தை சொல்ல, அதிர்ந்துபோன போலிஸார் அயனாவரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அயனாவரம் காவல்நிலைய போலிஸார் திருத்தணி சென்று சிறுமியை மீட்டுவந்தனர். பின்னர் சிறுமி கொடுத்த தகவலின் படி வழக்குப் பதிவு செய்த போலிஸார் வெங்கடேசனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் சிறுமிக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து சிறுமியின் பாட்டியை வரவழைத்து அவருக்கு அறிவுரை வழங்கி சிறுமியை ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் வெங்கடேசனை தேடும் முயற்சியில் இறங்கின.

அப்போது ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா பகுதியில் தலைமறைவாக இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவின் துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவை அடுத்து ஆந்திரா சென்று வெங்கடேசனை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். இதனையடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துவந்த வெங்கடேசன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தன.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அயனாவரம் சிறுமிக்கு நடந்த கொடுமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “மாநில ஜிம்னாஸ்டிக் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை” : போக்சோ சட்டத்தின் கீழ் பயிற்சியாளர் கைது!