Tamilnadu

“வியாபாரிகளிடம் மாமூல் கேட்டு மிரட்டும் அ.தி.மு.க நிர்வாகி” - போலிஸில் புகார் அளித்த பெண் வியாபாரி!

சென்னை சாலிகிராமம் எஸ்.கே.பாபு தெருவைச் சேர்ந்தவர் சுசீலா. இவர் ஆற்காடு சாலையில் தள்ளுவண்டியில் சூப் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு 7 மணியளவில் இவரது கடைக்கு சாலிகிராமம், தசரதபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.கவின் இளைஞர் - இளம்பெண்கள் பாசறை நிர்வாகி குமார் என்பவர் வந்துள்ளார். அப்போது, “இந்தப் பகுதில் எந்த கடை போடவேண்டுமென்றாலும் எங்கள் அனுமதி பெற்று, எங்களை ‘கவனித்தால்’ மட்டுமே கடை போட முடியும். இல்லையென்றால் இங்கு கடை நடத்தமுடியாது” என்று மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் யாருக்கும் பணம் தரும் நிலைமையில் தான் இல்லை என்றும் மாமூல் தரமுடியாது என்றும் கூறவே, “நான் நாளை வரும்போது இங்கு கடை இருக்கக்கூடாது” என மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.

இதனையடுத்து சுசீலா தன்னிடம் மாமூல் கேட்டு அ.தி.மு.க இளைஞர் - இளம்பெண்கள் பாசறை நிர்வாகி குமார் என்பவர் மிரட்டுவதாக விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: சென்னையில் இன்று ஒரே நாளில் 2,167 பேருக்கு கொரோனா..37 பேர் பலி.. என்ன திட்டத்துடன் உள்ளது அ.தி.மு.க அரசு?