Tamilnadu
“எனது மகனையும் விசாரணைக்கு அழைத்துச் சென்று சாத்தான்குளம் போலிஸார் தாக்கிக் கொன்றனர்” - தாய் புகார்!
தன் மகனையும், சாத்தான்குளம் போலிஸார், சட்டவிரோதமாக காவல் நிலையம் அழைத்துச் சென்று தாக்கிக் கொன்றது தொடர்பாக விசாரணை செய்ய உயரதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என இளைஞரின் தாய் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை-மகன் படுகொலை வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், தமது மகன் மகேந்திரனையும் சட்டவிரோதமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கிக் கொன்று விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இளைஞரின் தாய் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “எனக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மூத்த மகன் துரை இரண்டாவது மகன் மகேந்திரன் மற்றும் மகள் சந்தானம். எனது மகன்கள் இருவரும் தூத்துக்குடி மாவட்டம் பாப்பான்குளதில் உள்ள எனது சகோதரி வீட்டில் தங்கி வேலைக்குச் செல்கிறார்கள்.
தூத்துக்குடி, தெற்கு பைகுளம் அருகே ஜெயக்குமார் என்பவர் மர்ம கும்பலால் கடந்த மே 18 அன்று கொலை செய்யப்பட்டார், இதுதொடர்பாக கொலையான ஜெயக்குமாரின் தம்பி ஆளிகுமார் என்பவர் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகார் தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த மே 22 ஆம் தேதி அன்று சாத்தான்குளம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உட்பட சில காவல்துறையினர் எனது மூத்த மகன் துரையை தேடி எனது வீட்டிற்கு வந்தனர்.
ஜெயக்குமாரின் கொலை சம்பந்தமாக துரை மீது சந்தேகம் உள்ளது எனக் கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்ல வேண்டும் என்றனர். ஆனால் சம்பவம் நடந்ததாக கூறிய பைகுளம், பாப்பான்குளத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
பின்னர் பாப்பான்குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டுக்கு கடந்த 23ம் தேதி அன்று சென்றனர். அப்போது எனது மூத்த மகன் துரை வீட்டில் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த இரண்டாவது மகன் மகேந்திரனை காவல்துறையினர் வீட்டிற்கு வெளியே இழுத்து சென்று, சட்டவிரோதமாக அவரைத் தாக்கி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்டோர் மகேந்திரனை தலை உட்பட உடல் முழுவதும் பலமாகத் தாக்கியுள்ளனர். பின்னர் மே 24 ஆம் தேதி அன்று இரவு மகேந்திரன் காவல் நிலையத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அப்போது, காவல்துறையினர் அவரை மிரட்டும் வகையில், தற்போது காவல் நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து உயரதிகாரிகளிடம் எவ்விதப் புகாரும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளனர். காவல்துறையினர் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
சில நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் ஜூன் 13 தேதி அன்று சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார்.
பின்னர் அப்பகுதி மக்கள் ஆதரவுடன் எனது மகன் காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சம்பந்தமாக தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஜூன் 20 ஆம் தேதி அன்று புகார் அளித்தோம்.
ஆனால் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. சட்ட விரோதமாக எனது மகனை காவல் நிலையம் அழைத்துச் சென்று தலைப்பகுதி, உடலில் தாக்கிய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் மீது சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழப்பு சம்பந்தமாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை செய்து வருகிறது.
எனவே எனது மகன் மகேந்திரன் உயிரிழப்பு சம்பந்தமாக, சட்டவிரோதமாக காவல் நிலையம் அழைத்துச் சென்று அவரை தாக்கியது தொடர்பாக விசாரணை செய்ய உயரதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!