Tamilnadu

“அன்று யானை... இப்போது சிறுவன்” - வன விலங்குகளைக் கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கடித்த சிறுவன் படுகாயம்!

வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை கடித்த சிறுவன் பலத்த காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்கரியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும் வனப்பகுதிகளிலும் மர்ம நபர்கள் வன விலங்குகளை வேட்டையாட வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியினை அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரின் 7 வயது மகன் தீபக் என்பவன் பந்து என நினைத்துக் கடித்தபோது திடீரென நாட்டு வெடி வெடித்தால் தாடைப் பகுதி மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேல்கரியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்கு வன விலங்குகள் இரவு நேரங்களில் அதிகமாக வருவதால் அதனை வேட்டையாட அப்பகுதியில் உள்ள சில மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வைத்து வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வனப்பகுதி அருகே விவசாய நிலத்தில் விளையாட சென்றிருந்த கரியமங்கலம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் என்பவரின் 7 வயது மகன் தீபக் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த போது வனப்பகுதி அருகே நாட்டு வெடிகுண்டு கிடந்ததை எடுத்து விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் விஸ்வநாதன் என்பரின் நிலத்தின் அருகே வந்தபோது அதனை தீபக் வாயில் வைத்து கடித்துள்ளான். அப்போது திடீரென வெடித்த நாட்டு வெடிகுண்டால் தீபக்கின் வாய்ப் பகுதி மற்றும் வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துள்ளான். அதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு செங்கம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அவசர சிகிச்சைப் பரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுவன் தீபக்கிற்கு முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து செங்கம் காவல் துணை கண்காணிப்பாளர் சின்ராஜ் சம்பவம் குறித்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாட்டு வெடி குண்டு வைத்தது யார் என்றும், வன விலங்குகளை வேட்டையாடும் கும்பல் குறித்து போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தைக் கடித்ததில், வாய் சிதைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்போது வெடிகுண்டால் சிறுவன் படுகாயமடைந்துள்ள சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “யானை கொலை வழக்கில் ஒருவர் கைது” : பினராயி அறிவிப்பு முதல் பசுமைத் தீர்ப்பாய உத்தரவு வரை நடந்தது என்ன?