Tamilnadu

“மதுரையில் ஜூலை 12 வரை முழு ஊரடங்கு... சென்னையில் ஊரடங்கு தளர்வுகள்” - தமிழக அரசு அறிவிப்பு!

மதுரையில் வரும் 12-ம் தேதி வரை முழு ஊரடங்கை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தியது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றின் நிலையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக மதுரை மாவட்டத்தில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் ஜூலை 7ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் 7 நாட்களுக்கு (ஜூலை 12ம் தேதி வரை) நீட்டிக்க உத்தரவிட்டுள்ளேன். இந்தக் காலத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள அத்யாவசிய பணிகள் மட்டும் அனுமதிக்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னையில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை டீக்கடைகள் செயல்படலாம் என்றும் ஆன்லைன் டெலிவரிக்கு இரவு 9 மணி வரை அனுமதிக்கப்படும்.

காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது. நகை, ஜவுளிக்கடைகள் மாலை 6 மணி வரை திறக்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Also Read: “நீட் தேர்வு மீண்டும் ஒத்திவைப்பு” - நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைவதால் மத்திய அரசு அறிவிப்பு!