Tamilnadu
மாஸ்க் அணியாத முஸ்லிம் இளைஞரின் சிறுநீரகத்தை சிதைத்த போலிஸ்: தூத்துக்குடியில் தொடரும் அதிகார வன்முறைகள்!
சாத்தான்குளம் காவல்நிலைய சித்திரவதை படுகொலைகள் மிகப்பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் மேலும் ஒரு போலிஸாரின் அராஜக செயல் நடைபெற்றுள்ளது.
32 வயதான ஹபீப் முகமது என்பவர் கடந்த ஜூன் 9ம் தேதியன்று காயல்பட்டினம் குத்துக்கல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாட்டு பகுதி வழியாக, முகக்கவசம் அணியாமல் சென்றிருக்கிறார். அதன் காரணமாக ஹபீப்பை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்ற ஆறுமுகநேரி போலிஸார் அவரை கடுமையான முறையில் சித்திரவதை செய்து தாக்குதலுக்கு ஆளாக்கியுள்ளார்கள்.
இந்த தாக்குதல் காரணமாக ஹபீப் முகமதுவின் சிறுநீரகம் மிகவும் பாதிக்கப்பட்டு, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டயாலிஸிஸ் சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறையினரின் மிரட்டல் காரணமாக இது குறித்து ஹபீப் முகமது குடும்பத்தினர் புகார் தெரிவிக்க அஞ்சியுள்ளனர்.
முன்னதாக தாக்குதலை அடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட ஹபீப் முகமது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய அன்றைய தினமே காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சென்று தனக்கு எவ்வாறு இந்த காயங்கள் ஏற்பட்டன என்பதனை தெரிவித்து சிகிச்சை பெற்றுள்ளார். காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் விபத்துகள் பதிவேட்டில் ஆறுமுகநேரி காவல்நிலையத்தில் 4 பேர் சேர்ந்து தாக்குதல் நடத்தியதாக ஹபீப் கூறியது பதிவாகியுள்ளது.
அப்போது அங்கு வந்த காவல்துறையினர் ஹபீப் முகமது குடும்பத்தினரை மிரட்டி மருத்துவ உதவி கிடைக்கச் செய்யாத சூழலை உருவாக்கியுள்ளனர். தொடர்ந்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்ட நிலையில், காவல்துறையினரின் நிர்பந்தத்தினால் ஹபீப் முகமதுவை அழைத்துச் செல்லாமல் ஆம்புலன்ஸ் திரும்பி சென்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஹபீப் முகமது நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் செய்யும் நிலைக்கு அவர் சென்றுள்ளார். இதற்காக அவரது குடும்பத்தினர் லட்சக் கணக்கில் செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா நடவடிக்கை என்ற பெயரில் காவல் அதிகாரிகள் மேற்கொண்ட காட்டுமிராண்டி தாக்குதல் சாதாரண எச்சரிக்கை விடுத்து பிரச்சினையை முடிக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், தங்களுக்கு எதிரான பொதுமக்களின் கேள்விகளை கிரிமினல் குற்றமாகக் கருதியும், ஊரடங்கு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீதும் மனித உரிமைக்கு எதிரான மிருகத்தனமான தாக்குதலை தொடுத்த காரணத்தால், சாத்தான்குளத்தில் அப்பாவிகள் இருவரின் உயிரைப் பறித்துள்ளனர்.
அதேபோல் காயல்பட்டினத்தில் அப்பாவி ஒருவரை நடைபிணமாக்கியுள்ளனர். காயல்பட்டினம் இளைஞர் மீதான தாக்குதல் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை மேற்கொண்டு தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர் மற்றும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!