Tamilnadu
“வளைகுடா நாடுகளிலிருந்து திரும்ப முடியாத தமிழர்களை கைவிடலாமா?” : முதல்வருக்கு சு.வெங்கடேசன் கேள்வி!
உலகத் தமிழர்களை மத்திய, மாநில அரசுகள் போட்டிபோட்டு வஞ்சிப்பதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்று உலக கொள்ளை நோயாக அறிவிக்கப்பட்டு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சில நாட்களில் ஒரு கோடியைத் தொட்டுவிடும்.
தொற்று உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியவுடன், அந்த நாடுகளிலிருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் அழைத்து வருவதற்கான "வந்தே பாரத்" திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்தியர்கள் திரும்பி வர ஆர்வம் காட்டினர், அதற்குரிய கட்டணத்தை வசூல் செய்து இந்தியர்களை திரும்ப கொண்டுவந்து சேர்க்கிறது ஏர் இந்தியா விமானங்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் அதிகமாக வாழக்கூடிய வளைகுடா நாடுகளிலிருந்து திரும்ப வருவதற்காக லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பதிவு செய்துள்ளனர். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 34 லட்சம். இதில் மலையாளிகளின் எண்ணிக்கை 10 லட்சம், அவர்களுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள் தமிழர்கள். 4.5 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள்.
வளைகுடா நாடுகள் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் தமிழகர்கள் சிக்கி செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் "வந்தே பாரத்" திட்டத்தில் இதுவரை 1,175 முறை விமானங்களை இந்திய அரசு இயக்கியுள்ளது, இவற்றுள் 279 விமானங்கள் கேரளாவிற்கு மட்டும் இயக்கப்பட்டன. இந்த 279 பயணத்திலும் 238 விமானங்கள் வளைகுடா நாடுகளிலிருந்து கேரளாவிற்கு இயக்கப்பட்டுள்ளன.
ஜூன் நான்காம் தேதிவரை சுமார் 25,000 மலையாளிகள் கேரளா திரும்பியுள்ளதாக கேரளா முதலவர் அறிவித்துள்ளார், அவற்றுள் 20,000 பேர் வளைகுடாவிலிருந்து மட்டும் திரும்பியுள்ளனர். அடுத்த கட்டத்தில் இதுவரை 53முறை வளைகுடா நாட்டிலிருந்து மலையாளிகளை திரும்பக் கொண்டுவந்துள்ளது ஏர் இந்தியா. இதன் மூலம் மேலும் 10,000 பேர் திரும்பியுள்ளனர். அதே நேரத்தில் தமிழகத்திற்கு இதுவரை 73 விமானங்கள் மட்டுமே வந்துள்ளன, அதில் 27 விமானங்கள் மட்டுமே வளைகுடா நாடுகளிலிருந்து மக்களை திரும்ப அழைத்து வந்துள்ளது.
மேற்குறிப்பிட்ட விமான சேவையின் மூலமாக இதுவரை மொத்தமாக 12,000 - 14,000 தமிழர்கள் மட்டுமே திரும்பவந்துள்ளனர், அவற்றுள் வளைகுடா நாடுகளிலிருந்து திரும்பிவந்த தமிழர்களின் எண்ணிக்கை வெறும் 5,000 மட்டுமே. அதாவது ஒரு சதவிகிதத்தினர் மட்டுமே.
ஏன் இந்த பாரபட்சம்?
கேரளா மக்களை அதிக எண்ணிக்கையில் திரும்ப அழைத்து வர கேரள அரசு தொடர்ந்து மத்திய அரசை வற்புறுத்துகிறது. வந்தே பாரத் திட்டத்தில் அதிக விமானங்களை கோரி பெறுகிறது. ஆனால் தமிழக அரசோ இதற்கு நேரெதிராகச் செயல்படுகிறது. உலகெங்கும் பதிவு செய்து காத்திருக்கும் தமிழர்களை அழைத்துவர எந்த முன் முயற்சியும் தமிழக அரசிடம் இல்லை.
அதனால் மிகக்குறைவான விமானங்களே தமிழகத்துக்கு இயக்கப்படுகிறது. கேரளாவுக்கு இயக்கப்பட்டுள்ள விமானங்களில் நான்கில் ஒரு பங்கு விமானங்களே தமிழகத்துக்கு இயக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழகம் வரவேண்டியவர்கள் வந்து சேர இரண்டு மாதங்களுக்கு மேலாகும்.
வெளிநாடு வாழ் மலையாளிகளுக்கென தனியாக ஒரு துறை கேரளாவில் செயல்பட்டுவருகிறது. கொரோனா தொற்று அதிகரிக்க ஆரம்பித்தவுடன், தாயகம் திரும்பி வர விரும்புவோரை இணையதளத்தில் பதிவு செய்யச் சொன்னது கேரள அரசாங்கம். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதற்குறிய முன்னுரிமையுடன் கூடுதல் விமானங்களை இயக்கி தம் மக்களை திரும்ப அழைத்துக்கொண்டது.
தமிழக அரசு, சில கட்டங்களில் தனிமைப்படுத்துவதற்கான கட்டமைப்புகள் இல்லையென காரணத்தை கூறி விமானத்தை இயக்கவேண்டாம் என்று தெரிவித்தது. வந்தே பாரத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதல் பகுதியில் ஒரு விமானம் கூட தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை. வந்தேபாரத் விமானங்கள் இல்லாத போதும் தமிழ் மக்கள், தங்கள் பகுதியில் இயங்கும் தமிழ்ச் சங்கங்கள் மூலமும், சில நிறுவனங்களின் மூலமும் அவர்களாகவே ஒன்றிணைந்து தனி விமானத்தை பிடித்து தமிழகம் வந்தால் அவர்களிடம் தமிழக அரசு நடந்து கொள்ளும்விதம் "பகல் கொள்ளை" போல் உள்ளது.
நோய் தொற்றிலிருந்து தப்பித்து சொந்த மண்ணிற்கு வந்தால் போதும் என்று தங்களின் சேமிப்புகள் அனைத்தையும் இழந்து, கடன் வாங்கி விமானத்தில் தமிழகம் வந்தால், சோதனைக்கும், தனிமை படுத்துதலுக்கும் தமிழக அரசு வசூலிக்கும் கட்டணம் நபர் ஒன்றுக்கு இருபத்தி ஐயாயிரம் அளவுக்கு இருக்கிறது. இதே நேரத்தில் கேரள அரசு, அவர்கள் வந்தே பாரத் மூலமாக வந்தாலும், அவர்களாகவே விமானத்தை பதிவு செய்துவந்தாலும் அனைவரையும் ஒரே மாதிரிதான் கையாளுகிறது, அனைவருக்கும் ஒரே விதிதான்.
கொரோனா காலத்தில் உலகெங்கும் வசிக்கும் தமிழர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். தங்களின் தாயக திரும்ப நினைக்கும் அவர்களின் முயற்சிக்கு ஆதரவாக மத்திய அரசுமில்லை, மாநில அரசுமில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும் எண்ணற்ற தொலைபேசி அழைப்புகள் வருகிறது. கர்ப்பிணிகள், வயோதிகர்கள், இறப்பு வீட்டுக்கு வரவேண்டியவர்கள், விசா முடிந்தவர்கள், வேலையிழந்தவர்கள் என எல்லோரின் குரலும் விடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. தமிழக அரசு உடனடியாக இது விசயத்தில் அக்கரை மிகுந்த தலையீட்டினை செய்ய, தனி சிறப்பு அதிகாரியை நியமித்து மத்திய அரசை நிர்பந்தித்து, துடிப்போடு செயல்பட்டால் மட்டுமே துயரத்தில் வாழும் தமிழர்களுக்கு நியாயம் வழங்க முடியும்.
வந்தே பாரத் விமானங்களின் வழியாக வந்தாலும், தனித்த ஏற்பாட்டில் வந்தாலும் அனைவரையும் ஒன்று போல் நடத்தும் முடிவை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!