Tamilnadu

“செய்தி வாசிப்பாளர் வரதராஜன் வீடியோவில் குறிப்பிட்டவர் பலி” - இனியும் தொடரவேண்டாம் அரசின் அலட்சியம்!

செய்தி வாசிப்பாளரும், தொலைக்காட்சி நடிகருமான வரதராஜன் சமீபத்தில் ஒரு வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார். அதில், தனது நெருங்கிய நண்பர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கச் சென்றபோது எந்த மருத்துவமனைகளிலும் போதிய படுக்கை வசதி இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

மருத்துவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை எனக் கூறியதால், அவர் மீது ஆத்திரத்தைக் கொட்டியது அ.தி.மு.க அரசு. பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும், அரசின் கொரோனா தடுப்பு பணி குறித்து அவதூறு பரப்பியதாகவும் சுகாதாரத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டு அவர் மீது, பேரிடர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஒரு பத்திரிகையாளர் தனது அனுபவத்தை பகிர்ந்ததற்கு ஆளும் அரசு, அதிகாரத்தைப் பயன்படுத்தி வஞ்சிப்பதா எனக் குரல்கள் எழுந்தன. மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த வரதராஜனின் நண்பர் சமையல் கலைஞர் செல்லப்பா என்பதும், அவர் கொரோனா பாதிப்பால் தற்போது உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சமையல் வல்லுனராக இருந்த செல்லப்பா, இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளுக்கு சமையல் கலைஞராகப் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அரசின் அலட்சிய நடவடிக்கை இனியும் தொடரக்கூடாது என பலரும் கோரியுள்ளனர்.

Also Read: புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு : இன்று மட்டும் 1,982 பேருக்கு தொற்று... 18 பேர் பலி! #Corona