Tamilnadu
''நேற்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சு'' - செங்கோட்டையனின் அறிவிப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளின் கல்வி!
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில் இந்தியாவில் தனது சுயரூபத்தை கொரோனா காட்டி வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் கல்வி நிலையங்கள் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்கள் வீட்டில் பாதுகாப்பாக உள்ளனர். இந்த சூழலில் மாணவர்கள் நலன்களில் அக்கறைக் காட்டாத மத்திய மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கு நேரத்திலும் கல்வி பயிற்றுவிப்பதாக ஒரு மோசமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.
நாட்டில் பல பகுதிகளில் இன்னும் இணைய வசதி இல்லாத சூழலில் மாணவர்களுக்கு இணைய தளம் மூலம் வகுப்பு எடுக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மூன்று வேலை உணவுக்கு வழியில்லாத ஏழை மாணவர்கள் விலை உயர்ந்த செல்போன் மற்றும் இணைய வசதிக்கு எங்கு செல்வார்கள்.
மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை; தற்போது மாணவர்களுக்கு கல்வியைவிட அவர்களின் உயிர் முக்கியம் என்பதை இந்த அரசாங்கம் உணர மறுக்கிறது. அதன் வெளிப்பாடே தற்போது இணையத்தில் வகுப்பு எடுக்கிறோம் என கிளம்பியிருக்கிறார்கள்.
மத்திய பா.ஜ.க அரசு தமிழக நலனில் எப்போதும் அக்கறை செலுத்தியதே இல்லை. உதாரணமாக தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டுவந்து ஏழை மாணவர்களின் கல்விக் கனவை சிதைத்தது. மேலும் எஸ்.சி/எஸ்.டி., பி.சி மாணவர்களுக்கு வழங்கவேண்டிய கல்வி உதவித் தொகையைக் கூட மத்திய அரசு முழுமையாக வழங்கவில்லை.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் தாய்மொழிக் கல்வியான தமிழ் மொழிக்குப் பதிலாக இந்தியை திணிக்க நினைக்கிறது. இதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் தேர்வுகளை தமிழில் நடத்தாமல் இந்தியில் மட்டுமே நடத்தி மாணவர்களின் வேலைவாய்ப்பை பறித்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் கூட, 2020-2021 கல்வி ஆண்டில் மருத்துவ மேற்படிப்பில் நீட் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரி வாரியாகவும், இட ஒதுக்கீடு பிரிவினரையும் உள்ளடக்கிய பட்டியலை மத்திய அரசின் சுகாதாரத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ கலந்தாய்வுக் குழுவின் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அதில், மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 விழுக்காடும், அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இந்த இடங்களை நிரப்பும்போது பிற்படுத்தப்பட்டோரின் அகில இந்திய ஒதுக்கீடு 27 விழுக்காட்டை ஒதுக்காமல், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக பா.ஜ.க. அரசு தட்டிப் பறித்து வருகின்றது.
அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் திரட்டப்பட்ட தகவல் அடிப்படையில் ஏறத்தாழ 11,000 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு மறுக்கப்பட்டு, அவை பொதுப்பிரிவினருக்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் அனைத்தும், அரசின் அதிகாரப்பூர்வமான இணையத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.
இந்த கல்வி ஆண்டில், மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வுக் குழு தமிழ்நாட்டில் இருந்து பெற்ற அகில இந்திய தொகுப்பில் அளித்த இடங்கள் 941. இதில் ஒரு இடம் கூட பிற்படுத்தப்பட்டோருக்கு தரப்படவில்லை.
இதனிடையே, பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய ஒதுக்கீடு செய்யப்படும்போது, பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் சட்டப்பூர்வ இடஒதுக்கீட்டை பா.ஜ.க. அரசு மறுத்து வருவது ஏன் என இதுவரை பா.ஜ.க அரசின் விசுவாசியாக இருக்கும் தமிழக அ.தி.மு.க அரசு கேட்கவில்லை.
இந்தியாவிலேயே கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்றான தமிழகத்திற்கு இதுபோல அநீதி நடப்பது பெரும் வேதனை ஏற்படுகிறது. இந்த வேதனைகளுக்கு மத்தியில், தமிழகத்தில் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன் இதுபற்றி எந்த கவலையும் கொள்ளாமல் தனது வழக்காமான அறிவிப்பு விளையாட்டைத் தற்போதும் தொடர்ந்துள்ளார்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் கேள்வி கேட்காமல் தலையாட்டி ஆதரவு தரும் தமிழக அரசு, தற்போது மாணவர்களுக்கு ஆன்லைனில் கல்வி போதிக்கும் திட்டத்தையும் ஆதரித்துள்ளது.
அதிலும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மே 27ம் தேதி ஒரு அறிவிப்பை வெளியிடுகிறார். அந்த அறிவிப்பில், “ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் தனியார்ப் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.
இந்த அறிவிப்பு வெளியான அடுத்த சிலமணி நேரத்திலேயே, “ஆன்லைன் வகுப்பு எடுப்பதை நாம் தடுக்க முடியாது. மத்திய அரசு அதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் தனியார் பள்ளிகள் மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வகுப்புகளை நடத்தக் கூடாது. தனிப்பட்ட முறையில் ஆன்லைன் வழியில் வகுப்புகளை நடத்துவதை நாம் தடுக்க முடியாது” என்றும் தெரிவிக்கிறார்.
Also Read: சாதிக்கயிறு விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் அமைச்சர் செங்கோட்டையன் - முடிவெடுக்க திணறுகிறதா அரசு ?
இப்படி மாறி,மாறி வெளியிடப்படும் அறிவிப்பால் தமிழக மாணவர்கள் பெரிதும் குழம்பிபோய் உள்ளனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். முன்னதாக 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது தொடர்பாக மாறி, மாறி அறிவிப்பு வெளியிடுகிறார்.
கல்வித் துறையின் இந்த தொடர் குளறுபடியால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி உள்ளது என கல்வியாளர்கள் தமிழக அரசுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!