தமிழ்நாடு

சாதிக்கயிறு விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் அமைச்சர் செங்கோட்டையன் - முடிவெடுக்க திணறுகிறதா அரசு ?

சாதிக்கயிறு விவகாரத்தில் மாற்றி மாற்றி பேசும் அமைச்சர் செங்கோட்டையன் - முடிவெடுக்க திணறுகிறதா அரசு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் சாதியைக் குறிக்கும் வகையில் கைகளில் வண்ணக் கயிறுகள் மற்றும் பேண்ட் அணிந்து வருகின்றனர். இதனால் மாணவர்களிடையே சாதிய மோதல் ஏற்படுவதாகப் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அரசுக்கு அறிக்கை அனுப்பினர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சாதியைக் குறிக்கும் வகையிலான வண்ணக் கயிறுகள், ரப்பர் பேண்ட்கள் அணியத் தடை விதித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. மேலும், பள்ளிகளில் சாதிப்பிரிவினைகள் ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்தது.

கல்வித்துறையின் இந்த உத்தரவிற்குக் கல்வியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ''பள்ளிகளில் மாணவர்கள் தங்கள் சாதியினை வெளிப்படுத்துகின்ற வகையில் நடந்துகொண்டால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சுற்றறிக்கை அரசின் கவனத்திற்கு வரவில்லை. தமிழக பள்ளிகளில் முன்பு என்ன நடைமுறைகள் இருந்ததோ அந்த நடைமுறைகள் பின்பற்றப்படும்'' எனத் தெரிவித்தார்.இதற்கு கல்வியாளர்கள், பொதுமக்கள் என பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த பள்ளிகளில் சாதி, மத அடையாளங்கள் உள்ளது என புகார் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பள்ளி மாணவர்கள் சாதியைக் குறிப்பிடும் வண்ணக் கயிறுகள் கட்டும் விவகாரத்தில் பள்ளிகளில் உள்ள பழைய நடைமுறைகளே தொடரும் என நேற்று கூறியிருந்த நிலையில், இன்று அமைச்சர் செங்கோட்டையன் மாற்றிப் பேசியுள்ளது கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories