Tamilnadu

வலுவிழக்கும் சூப்பர் சைக்ளோன் உம்ஃபன் : 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்!

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகக் கூடும்.

மேலும், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் நிலவரம்

மிகக் கடும் புயலாக (சூப்பர் சைக்ளோன்) நிலவி வந்த உம்ஃபன் புயல் இன்று காலை 11 மணி நிலவரப்படி வலுவிழந்து கடும் புயலாக உருமாறி மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கொல்கத்தாவிற்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 690 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இது கடந்த ஆறு மணி நேரத்தில் வடக்கு திசையில் மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. மேலும் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்க கடற்கரையை நாளை அதாவது நாளை மாலையோ அல்லது நாளை இரவிலோ வலுவிழந்து தீவிர புயலாக உருமாறி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இதன் காரணமாக, 19ஆம் தேதியான இன்று, மத்திய வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்ககடல் பகுதிகளில் கடும் சூறாவளி காற்று மணிக்கு 200 முதல் 250 வரை யிலும் இடையிடையே 230 கிலோ மீட்டர் வரையிலும் வீசக்கூடும். தெற்கு வங்ககடல், குமரிக்கடல், லட்சத்தீவு மாலத்தீவு கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

அதேபோல, நாளை (மே 20) வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வரையிலும் இடையிடையே 185 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும். இந்த காலகட்டங்களில் கடல் மிகச் சீற்றத்துடன் காணப்படும். ஆகவே, மீனவர்கள் தெற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், 20ஆம் தேதி மத்திய மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்படியாக சேலத்தில் 5 செ.மீ மழையும், பெரம்பலூரில் 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read: உச்ச உயர் தீவிர புயலானது உம்ஃபன்: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்!