Tamilnadu

உச்ச உயர் தீவிர புயலானது உம்ஃபன்: தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அப்டேட்!

தெற்கு வங்க கடல் பகுதியில் நேற்று மாலை நிலைகொண்டிருந்த உம்ஃபன் அதி தீவிர புயல், இன்று வட திசை நோக்கி நகர்ந்து அதிகாலை 2:30 மணியளவில் உச்ச உயர் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இன்று மத்திய வங்கக்கடல் தென் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 140-150 கி.மீ வேகம் வரையிலும் இடையிடையே 165கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். மேலும் தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ வரையிலும் அவ்வபோது 65கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

நாளைய (19/5/20) தினம் மத்திய வங்கக்கடலின் வடக்கு பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 170- 180கி.மீ வேகத்திலும், இடையிடையே 200 கி.மீ வேகத்திலும். மேலும் வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்காள கடல்பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45-55 கி.மீ வரையிலும், இடையிடையே 65கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

நாளை மறு தினம்(20/5/20) வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் கடும் சூறாவளிக் காற்று மணிக்கு 155-165 கி.மீ வரையிலும், இடையிடையே 180கி.மீ வரையிலும் வீசக்கூடும். மேலும் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 75-85 கி.மீ வேகத்திலும், இடையிடையே 95கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

கடல் மிக சீற்றத்துடனும் இடையே அதி சீற்றத்துடனும் காணப்படும். இதனால் வரும் 20ஆம் தேதி வரை மீனவர்கள் யாரும் மேற்கூறிய பகுதியிலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலையை காட்டிலும் 2-3டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர்ந்து காணப்படும்.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்துவரை பொதுவாக மேகமூட்டத்துடனும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29டிகிரி செல்சியசை ஒட்டியே இருக்கும்.